UPSC/TNPSC: `அனுபவப் பகிர்வுகளை மிஸ் பண்ணாதீங்க’ – சிவில் இன்ஜினீயரிங் டு IFS கிருத்திகா IFS

திருச்சியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2024 – 25 – ம் ஆண்டுக்கான `UPSC/TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்கிற இலவச ஆலோசனை முகாம் மற்றும் ஒரு வருட இலவச பயிற்சிக்கான Scholarship Test நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த இலவச பயிற்சி முகாம் குறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா சீனிவாசன் IFS பேசியிருக்கிறார்.

தற்போது, திருச்சி மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வரும் கிருத்திகா சீனிவாசன், கடந்த 2020 – ம் ஆண்டு இந்தப் பணிக்குள் நுழைந்தவர். சென்னையில் சிவில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்தபிறகு, தேர்வு எழுதி ஐ.எஃப்.எஸ் ஆகத் தேர்வானார். தனது கல்லூரி காலங்களில் அவர் யுனிசெஃப் ((UNICEF) இந்தியாவின் மாணவர்களுக்கான தூதுவராகவும், இந்தியாவின் முதன்மை சுகாதாரத் திட்டத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

kirithiga IFS

அதன்பிறகு, உதவி வனப் பாதுகாவலராக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பயிற்சி பெற்றார். தற்போது, திருச்சி மாவட்ட வன அலுவலராகப் பணி கிடைத்து சிறப்பாகப் பணியாற்றிவருகிறார். திருச்சியில் இயற்கை சூழலின் பரப்பளவை அதிகரிக்க வைக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அதோடு, பச்சைமலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றவும், வண்ணத்துப்பூச்சி பார்க்கை வெறும் சுற்றுலா தலமாக மட்டுமல்லாது, ஆய்வு செய்யும் இடமாக மாற்றவும் முனைப்புக் காட்டி வருகிறார்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஐ.எஃப்.எஸ்-யை சந்தித்துப் பேசினோம்.

“என் அப்பா அரசு ஊழியர். அம்மா கல்லூரி பேராசிரியை. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வியெல்லாம் சென்னையில் தான் முடித்தேன். சிவில் இன்ஜினீயரிங் படித்தேன். கல்லூரி படிப்பு முடிக்கிற வரைக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் பற்றி என்னவென்றே தெரியாது. ஆனால், கல்லூரியில் படிக்கும்போதே, ‘படித்து முடித்ததும், ரெகுலர் கார்ப்பரேட் ஜாப்-க்கு போகக் கூடாது’ என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால், கேம்பஸ் இன்டர்வியூ எதையும் அட்டென்ட் செய்யவில்லை. அதன்பிறகு, ஐ.ஏ.எஸ் தேர்வு உள்ளது என்பது தெரிய வந்தது. ஆனால், அது என்ன தேர்வு என்று அரிச்சுவடிக் கூட தெரியாமல் இருந்தேன்.

kirithiga IFS

அதனால், கெய்டு புத்தகங்களை வாங்கி வீட்டிலேயே படிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத பயிற்சி பெற பயிற்சி வகுப்புகள் இருப்பதை தெரிந்துகொண்டேன். அதனால், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்தபிறகுதான், ‘இதுதான் யூ.பி.எஸ்.சி தேர்வு. இதில் இவ்வளவு சர்வீஸ் தேர்வுகள் இருக்கு’ என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு வருஷம் தீவிரமாகத் தயாரானேன். முதல் அட்டெம்ன்டில் 2015 – ம் ஆண்டு இன்டர்வியூவை க்ளியர் பண்ண முடியவில்லை. இப்படி, ஒவ்வொரு முயற்சியிலும் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனாலும் ஐந்து வருட முயற்சியில் ஐந்தாவது அட்டெம்ட்டில் தான் ஐ.எஃப்.எஸ் ஆகத் தேர்வானேன்.

எதில் எனக்கு ஆர்வம் அதிகமோ அந்த மாதிரியான புத்தகங்களை அதிகம் படித்தேன். நான்ஃபிக்‌ஷன் புத்தகங்களில் அதிக ஆர்வம் வந்தது. அதிலும் குறிப்பாக, ஜாக்ரஃபி அடிஷனலாக இருந்ததால், அதுவரை அதில் ஈடுபாடு இல்லை என்றாலும், அந்த ஜானரிலும் நிறைய விசயங்களைப் படித்தேன். வரலாறு சம்பந்தப்பட்ட நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும், சப்ஜெக்ட் புத்தகங்கள், நான்ஃபிக்‌ஷன் புத்தகங்களை அதிகம் படித்தேன். நான் படித்தது சிவில் இன்ஜினீயரிங் கோர்ஸ் என்பதால், பார்ட் டைமாக இன்டீரியர் ஒர்க்ஸை பார்த்துக்கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானேன். தினமும் ஐந்து மணி நேரம் படிப்பதற்கு ஒதுக்கினேன்.

kirithiga IFS

கான்சியஸ் போய்விடும் என்பதால், தேர்வை க்ளியர் பண்ணும் வரை சோசியல் மீடியா பக்கமே நான் போகாமல் தவிர்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கேரியர்தான். வேறு கேரியர் இல்லை. அதனால், உங்களுக்கு எதில் ஆர்வமோ அதில் ஈடுபடலாம். அதற்கு, உங்கள் முன்பு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன… அவற்றில் நீனக்கள் எதை அட்டென்ட் பண்ணலாம் என்பது உங்களுக்கு முதலில் ஒரு தெளிவும், புரிதலும் இருக்க வேண்டும். சிவில் தேர்வு எழுதுவதில் உங்களுக்கு நாட்டம் இருந்தால், அதற்காக இதில் முயற்சி செய்யலாம்

உங்கள் முயற்சி வெற்றிப்பெற்றால், அந்த வழியில் செல்லலாம். அப்படி இல்லை என்றால், சிவில் தேர்வு எழுதியதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொண்டு, அந்த அனுபவத்தை உங்களுக்குப் பிடித்த மற்ற துறையில் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோல், இன்னும் நிறைய அனுபவப் பகிர்வுகளை வரும் ஞாயிற்றுக்கிழமை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் கிடைக்கப் பெறும். அதைக் கேட்க, நீங்கள் இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொள்வது அவசியம்” என்றார்.

kirithiga IFS

கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் ஆனந்த விகடன், இணைந்து திருச்சியில் வரும் 23 – ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடத்தும் UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ள, கீழ்கண்ட இணைப்பை க்ளிக் செய்து, அதில் விண்ணப்பிக்கவும்.