‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிலாளர்கள் போராடினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடந்த இப்போராட்டம் தமிழக அரசின் தலையீட்டால் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதியுடன் வாபஸ் பெறப்பட்டது. பிறகு போராடிய சாம்சங் ஊழியர்களும் அன்றே பணிக்குத் திரும்பினர்.
சாம்சங் நிறுவனம், போராடிய ஊழியர்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும், பணி நீக்கம் போன்ற பழி வாங்கும் வேலைகளில் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு அரசு, சாம்சங் நிறுவனம், சாம்சங் ஊழியர்களின் முத்தரப்புப் பேச்சு வார்த்தையின் முடிவில் உறுதியளிக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஜனவரி 27ம் தேதி ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரிலேயே தொழிற்சங்கம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.
நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கை
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்தது என்று நினைத்தால், நிறுவனம் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டு, மீண்டும் போராட்டத்தை வெடிக்க வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக விட்டுவிட்டு, பிரச்னையின் தீவிரம் அடங்கியபின், சில மாதங்களுக்குப் பிறகு போராடிய ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளைச் செய்ய ஆரம்பித்தால் கவனம் பெறாது என்று பணிநீக்கம், பணிச்சுமையை கூட்டும் செயல்களில் நிறுவனம் ஈடுபடுவதாக சாம்சங் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாம்சங் நிறுவனத்தின் ‘ஹெச்.ஆர்’ துறை, ஊழியர்களைத் திடீரென தெரியாத வேலைக்கு மாற்றிவிடுவது, அற்பக் காரணங்களுக்குத் திட்டுவது என ஊழியர்களுக்கு மன அழுத்தம் கொடுத்து வருவதாகவும் வேதனைத் தெரிவிக்கின்றனர். பணி நேரத்தில் விதிகளை மீறியதாகவும் உணவு இடைவேளை முடிந்த பின்னரும் வேலை இடத்திற்கு வராமல் காலதாமதம் செய்ததாகவும் போன்ற அற்பக் காரணங்களைக் கூறி நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுக்கும் சாம்சங் நிறுவனம்
சட்டப்பூர்வமாக ஆங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தை சாம்சங் நிறுவனம் அங்கீகரிக்காமல், அதில் இருப்பவர்களை நிர்வாகம் சார்பாக உருவாக்கப்பட்ட ‘ஊழியர் கமிட்டி’யில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகவும், தனிப்பட்ட முறையில் ஊழியர்களை அச்சுறுத்தியும், ஆசை காட்டியும் தொந்தரவு செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் சூழலில் ‘ஹெச்.ஆர்’ ஊழியர்களின் பணிநீக்க, மன அழுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஊழியர் கமிட்டியின் அடாவடியான செயல்பாடுகள் குறித்தும் சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் புகாரளித்துப் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டுள்ளனர் சாம்சங் ஊழியர்கள்.
கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று நிர்வாக இயக்குநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கின்றனர். ஆனால், ஜனவரி 31ம் தேதி அன்று உணவு இடைவேளையின்போது நிர்வாக இயக்குநரைச் சந்திக்கத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சென்றபோது காத்திருக்கச் செய்துவிட்டுச் சந்திக்க விடாமலேயே திருப்பி அனுப்பியதாகக் கூறுகின்றனர்.
மீண்டும் வெடித்தப் போராட்டம்
இந்த விவகாரம் இப்படி சூடுபிடிக்க, கடந்த பிப்ரவரி 5ம் தேதி சாம்சங் நிர்வாகம் சில காரணங்களைக் கூறி தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவர்களான மோகன்ராஜ், சிவநேசன், குணசேகரன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது சாம்சங் நிறுவனம். அடுத்தடுத்து ஊழியர்கள் பலரும் இதேபோல பணியிடை நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அச்சப்படுகின்றனர் சாம்சங் ஊழியர்கள்.

இந்நிலையில் நிறுவனத்தின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து பிப்ரவரி 5ம் தேதி முதல் கடந்த 12 நாட்களாக 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாம்சங் நிறுவனத்தின் உள்ளேயே உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கலைக்க, மின்சார துண்டிப்பு, போராடும் இடத்தில் கழிவறைய இழுத்துப் பூட்டுவது என நிறுவனம் பல வேலைகளைச் செய்துவருவதாகக் கூறுகின்றனர் போராடும் ஊழியர்கள். நிறுவனத்தின் உள்ளே போராடுவது வெளியில் தெரியக் கூடாது என நிறுவனத்தின் வெளியே பஸ்களை வைத்து மறைத்தும், ஊடகத்திற்கு அனுமதி மறுத்தும் வருகின்றனர் நிறுவனத்தினர், என்கின்றனர் ஊழியர்கள்.
இன்று (பிப் 17) போராடும் சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினர் ஶ்ரீபெரும்புதூர் சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். ‘நிறுவனம் ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடாது’ என்பதே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஶ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.