விகடன் இணையதள முடக்கம்: `நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்’ – அருந்ததி ராய்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கை,கால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தியது. இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், எதிர்க்கட்சிகளுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பாக பிரதமர் மோடியோ அல்லது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ அமெரிக்காவுக்கு எந்த எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதை விமர்சிக்கும் விதமாக விகடன் டிஜிட்டல் பிளஸ்ஸில் கடந்த 10-ம் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டது.

அருந்ததி ராய்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, விகடன் வலைப்பக்கம் பலருக்கு வேலை செய்யவில்லை. அரசு தரப்பிலிருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விகடன் வலைப்பக்கம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதை வரவேற்று பா.ஜ.க ஆதரவுத் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதே நேரம், எதிர்க்கட்சிகளும், ஊடவியலாளர்களும், அரசியல் கட்சிகளும், கருத்துரிமைக்கான குரல் ஒடுக்கப்படுவதாக மத்திய அரசை விமர்சித்து கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், “நம் அரசாங்கம், சட்டத்துக்குப் புறம்பான வகையில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராகச் சென்றால், போராடவே வாய்ப்பளிக்காமல் கருத்துகளை ஒடுக்கினால், அதற்கு நாம் அனுமதித்தால், அவர்கள் நம் குரல்களை எடுத்துவிடுவார்கள்; நம்மை கூண்டில் அடைத்து சாவியையும் தூர எறிந்துவிடுவார்கள். நம் குழந்தைகள் ஏதும் அறியாத கைப்பாவைகள் ஆகிவிடுவார்கள். ஒரு தேசமாக நாம் தடம் புரண்டுவிடுவோம், தேக்கநிலையை அடைந்துவிடுவோம். நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.