சேலத்தில் நடந்த `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி… இறுதிச்சுற்றுக்கு தேர்வான மூவர்..!

சேலத்தில் அவள் விகடன் சார்பில் சக்தி மசாலா வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-2 நிகழ்ச்சி சௌடேஷ்வரி மகளிர் கல்லூரியில் நேற்று காலை துவங்கியது. இதில், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செஃப் தீனா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சி ஸ்பான்சர்ஸ், சௌடேஸ்வரி கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து  போட்டியாளர்களை வரவேற்று பேசினர்.

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். தங்களது தாய், மகன், அக்கா, சகோதரன் ஆகியோர் எப்படி சமைக்கிறார்கள் என்பதை பார்க்க உறவினர்கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.

இதில், வயதுவரம்பு ஏதுமின்றி பலர் தனது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக போட்டியில், பெரியவர்கள், சிறியவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சேலம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முதல் சுற்றில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், இரண்டாம் சுற்றுக்கு 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பிரத்தியேகமாக உணவு செய்யும் நெறிமுறைகளை செஃப் தீனா கூறினார். அதாவது மில்கி மிஸ்ட், பனீர், சக்தி மசாலா இவை அனைத்தும் பயன்படுத்தி உணவு செய்யவேண்டும். அதன் அடிப்படையில், போட்டியாளர்கள் உணவை செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த 10 போட்டியாளர்களுக்கான போட்டியில் 3 போட்டியாளர்கள் தன்ஷிகா, கவிதா, ஆய்ஷா ஆகியோர் இறுதிபோட்டிக்கு தேர்வாகினர். அவர்கள் செய்த உணவை பற்றி செஃப் தீனா சுவைத்து பார்த்து செய்முறை குறித்து கேட்டறிந்தார். வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு செஃப் தீனா, விகடன் மார்க்கெட்டிங் மேனேஜர் சதிஷ்குமார் பரிசுகளை வழங்கினர்.

இதுகுறித்து இறுதிபோட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரிடம் பேசியபோது, “காலையில் இருந்து ஒவ்வொரு லெவலையும் கடக்கும்போதும் உள்ளுக்குள் சற்று பயமாக தான் இருந்து வந்தது. இத்தனை போட்டியாளர்கள் மத்தியில் எப்படி ஜெயிப்பது என்று கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால் ஜெஃப் தீனா அவர்கள் எங்களிடம் வெறும் சமையல் பற்றி மற்றி கேட்டறியாமல், எல்லோருக்கும் அடுத்தக்கட்ட லெவலை இன்னும் நல்ல செய்ய வேண்டும் என்று உற்சாகத்தை அளித்தார். அதன்மூலம் தான் நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம். மேலும், இங்கேயே திறமை வாய்ந்த போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர் என்றால், சென்னையில் நடக்கும் இறுதி போட்டியில் இதைவிட திறமைசாலிகள் வருவார்கள். அவர்கள் மத்தியில் எப்படி வெற்றி பெறவேண்டும் என்பது தான் எங்களுக்கு மிகபெரிய சவால், கண்டிப்பாக சேலத்தின் பெருமையை காக்கும் விதமாக வெற்றிபெறுவோம்” என்றனர்.