ஈரோட்டில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் என திமுக கட்சி அமைப்பு ரீதியாக இருந்த இரண்டு மாவட்டங்கள், மூன்றாகப் பிரிக்கப்பட்டு, மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகளைக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய மாவட்டத்துக்கு அதிமுகவில் இருந்து 2021-இல் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், பெருந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளரான கே.பி.சாமி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்நிலையில், தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கட்சித் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்ப உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கே.பி.சாமி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்து வருபவர் கே.பி.சாமி. தொடர்ந்து 10 ஆண்டுகளான அதிமுக ஆட்சியின்போது, பெருந்துறையைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம்தான் அமைச்சராக இருந்தார். அப்போது, அரசியல் ரீதியாக பல அழுத்தங்கள் கொடுத்தும் அதை தாங்கிக் கொண்டு இருந்தோம். இப்போது, அதே தோப்பு வெங்கடாசலத்தை மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களது எதிர்ப்பை தலைமையிடம் தெரிவித்தும் அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்தான் கே.பி.சாமி தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளார்”என்றனர்.

கே.பி.சாமி நீண்டகாலமாக கட்சியில் இருப்பவர் என்பதால் அவரை சமாதானப்படுத்த கட்சித் தலைமை முத்துசாமிக்கு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, கே.பி.சாமியை தனது வீட்டுக்கு அழைத்த முத்துசாமி, கே.பி.சாமியை சமாதானப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, கே.பி.சாமியின் வீட்டுக்குச் சென்ற தோப்பு வெங்கடாசலம் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம் என அவரிடம் பேசிவிட்டு வந்துள்ளதாக விவரம் அறிந்த திமுகவினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “கட்சிரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்படும்போது, ஒருவருக்கு பதவி கிடைக்கும் ஒருவருக்கு பதவி கிடைக்காமல் போகும். அரசியல் களத்தில் இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதுமட்டுமில்லாமல் இது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை. இதை நாங்களே சரிபடுத்திக் கொள்வோம். ஊடகங்கள்தான் இதை பெரிதுபடுத்துகிறது” என்றார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play