Delhi: டெல்லியில் நிலநடுக்கம்… வீடுகள் குலுங்கியதால் வெளியேறிய மக்கள்; வைரலாகும் காணொலிகள்

டெல்லியில் இன்று (பிப் 17) அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க அதிர்வானது டெல்லியைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளான நொய்டா மற்றும் குர்கானில் ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை தூக்கத்தில் இந்த நில அதிர்வை உணர்ந்த மக்கள், பதறி அடித்து வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கி.மீ., ஆழத்தில் உருவானது என்றும் இது ரிக்டரில் 4.0 ஆகப் பதிவாகி இருக்கிறது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுவரை பாதிப்பு தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகவில்லை. இன்று அதிகாலை முதலே இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில், “அனைவரும் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ஏதேனும் பாதிப்புகள் அல்லது அவசர உதவிக்கு டெல்லி போலீசார் தரப்பில் 112 என்ற எண்ணில் அழைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play