விகடன் இணையதள முடக்கம் : `ஜனநாயகத்துக்கு எதிரான அரசின் போக்கு’ – கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அங்கு சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது. அதன் பகுதியாக அமெரிக்காவில் சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக விலங்கிட்டு இராணுவ விமானத்தில் நாடு கடத்தியது. இது தேசிய அளவில் பேசுபொருளானது. பல்வேறு அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

இதனிடையே, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இதனைக் கண்டிக்காமல் இருந்தது மேலும் சர்ச்சையானது. இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் விகடன் ப்ளஸ் இணைய இதழில் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே, விகடன் தளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

`இது பா.ஜ.க.வின் பாசிசத் தன்மைக்கு எடுத்துக்காட்டு’ என தமிழ்நாடு முதல்வர் உட்பட்ட பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இதனைக் கண்டித்தனர். இதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை சிம்சன் அருகில் உரிமைக்குரல் எழுப்பும் போராட்டத்தை நடத்தியது.

மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமைலயில் நடைபெற்ற இந்த போராட்டத்தை அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துத் தொடக்கி வைத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், மோடி அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “இந்திய மக்களை தீவிரவாதிகள் போல நடத்திய அமெரிக்க அரசைத் தட்டி கேட்டு வாய் திறக்காத மோடி அரசு, இந்திய நாட்டு மக்களின் உணர்வையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக ஆனந்த விகடன் வெளியிட்ட கார்டூனுக்காக அதிகாரப்பூர்வமற்ற முறையில் விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளது.

இது ஒரு வெட்கக்கேடு! அவர்கள் என்ன தேசத்துக்கு விரோதமாகச் செயல்பட்டார்களா? தேசத்தின் ஜனநாயகத்துக்காக தானே குரல் கொடுத்துள்ளார்கள்? இன்றைக்கு மூன்றாவது விமானம் வந்துள்ளது. இந்தியாவில் குற்றவாளிக்கே விலங்கிடக் கூடாது என்பது விதி. ஜனநாயகத்துக்கு எதிரான அரசின் போக்கைக் கண்டித்துப் பகுத்தறிவின் ஜனநாயகத்தின் அடையாளம் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து இந்த உரிமைக்குரல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்காகச் செங்கொடி இயக்கம் நிற்கும் என்பதை இதன் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “பத்திரிகை கருத்துச் சுதந்திரத்துக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் சென்னை மாநகர போலீஸ் கைது செய்ய வந்துள்ளது என்றால் இது தமிழ்நாடு போலீஸா அல்லது அண்ணாமலை போலீஸா? போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் தந்தை பெரியார் சிலைக்கு மாலை போட்டு முழக்கம் இட்டால் கைது செய்யும் சென்னை காவல்துறையின் விரோத போக்கை மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக நான் கண்டிக்கிறேன்.” எனப் பேசிக்கொண்டிருக்கும் போது இடைமறித்த போலீஸார் மார்க்சிஸ்ட் கட்சியினரைக் கைது செய்தனர்.

அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த கட்சியினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ய முயன்றது காவல்துறை. கட்சியினர் போலீஸாருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் காவல்துறைக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜி செல்வாவை கைது செய்ய முற்பட்ட காவல்துறையைக் கண்டித்துக் கூடியிருந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாக வண்டியில் ஏற்றி கைது செய்தனர்.