China: “போலீஸ் அங்கிள் எங்க அப்பாவை பிடிங்க!” -போன் போட்டு தந்தையை மாட்டிவிட்ட சிறுவன்!

தந்தையையே மகன் மழலை தன்மையால் காவல் அதிகாரிகளிடம் மாட்டிவிடும் கதைகளை திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதே போன்றதொரு சம்பவம் சீனாவில் நிகழ்ந்திருக்கிறது.

சீனாவில் நடைபெறும் லூனார் புத்தாண்டுக்கு பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணத்தை வழங்குவது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படி சீனாவிலுள்ள லான்செளவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு புத்தாண்டை முன்னிட்டு பெரியவர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பணத்தை சிறுவர்கள் தவறான வழியில் செலவழிக்காத வண்ணம் பெற்றோர்கள் அதை எடுத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி அந்த சிறுவனுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை தன்னுடைய தந்தை திருடிவிட்டதாக சண்டையிட்டு அவரின் தொலைப்பேசியை வைத்து போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

Child with Police ( Illustrated by AI)

காவல்துறையினரை அழைத்து, “ என் வீட்டில் ஒரு கெட்டவன் இருக்கிறான். அவன் என் பணத்தை திருடிவிட்டான்” என அந்தச் சிறுவன் புகாரளித்திருக்கிறார். இச்செய்தியை அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரி ஒருவர் விரைந்திருக்கிறார்.

காவல் அதிகாரி வந்ததும் அந்த சிறுவன் தனது தந்தையைச் சுட்டிக்காட்டி, “போலீஸ் அங்கிள், மிக விரைவாக வந்துவிட்டீர்கள். தயவு செய்து இந்தக் கெட்டவனை உடனடியாக பிடியுங்கள்.” என கூறியிருக்கிறார். சிறுவனின் தந்தை காவல் அதிகாரியிடம் மன்னிப்புக் கோரி சூழலை எடுத்து விளக்கியிருக்கிறார். சூழலைப் புரிந்துக் கொண்ட காவல் அதிகாரி சிறுவனிடம், “உங்களின் பணம் தந்தையிடமே இருக்கட்டும். உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்” என எடுத்து கூறியிருக்கிறார். மேலும், சிறுவனின் தந்தையிடம் குழந்தை வளர்ப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும் என காவல் அதிகாரி அறிவுறுத்தியிருக்கிறார்.