ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெயர்ந்த நாடோடிகள், விறகு வெட்டிகள், கறி கடை பாய், மட்பாண்டங்கள், ஆலமரத்தடியில் பீடி சுருட்டும் தாத்தா என் குட்டி தமிழ்நாட்டை நம் கண்ணெதிரே வடித்து காட்டியது இந்த கண்காட்சி.

எழும்பூர் அருங்காட்சியகத்தில் பழனி குமார் தலைமையில் மாதிரி பள்ளிகள் துறை சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் தங்கள் புகைப்பட திறனை காட்டியுள்ளனர். பெரும்பாலான புகைப்படக்காரர்கள் 18 வயதை தாண்டவில்லை. மிகவும் குறைந்த பண உதவியில் இத்தகைய கண்காட்சி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு புகைப்படமும் ஒடுக்கப்பட்ட தங்கள் வாழ்வியலை கூறுகிறது. மாணவர்களுக்கு போட்டோகிராபி வகுப்புகளுக்காக மாடல் ஸ்கூல் மாணவர்கள் கையில் கேமரா வருகிறது. அதன் மூலம் அவர்கள் யாருடைய கதைகளையோ சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் பெற்றோர்கள் கதைகளை சொல்கிறார்கள். கேமராக்கள் கதைச்சொல்லியாக இருந்து அவர்களின் குழுவின் வாழ்க்கை சொல்லியாக மாறுகிறது.

“என் அப்பா சமையல்காரர், பெருசா என்ன வேலை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இந்த புகைப்படங்கள் எடுக்கும் போதுதான், அவரது கடின வாழ்க்கை எனக்கு தெரிந்தது. அந்த பரோட்டா கல் வெப்பதிற்கு அருகே கொஞ்ச நேரம் கூட நிற்க முடியவில்லை. ஆனால், என் அப்பா மதியம் 12 மணி முதல் இரவு 12 மணி வரை அதில் தான் வேலை செய்கிறார். இது புகைப்படங்கள் எடுக்கும் போது தான் எனக்கு தெரிந்தது.” என்றார் மதுரை மாதிரி பள்ளி மாணவர் கோவர்த்ததன்.
பீடி சுற்றும் தாத்தாவின் வாழ்க்கையை புகைப்படங்கள் மூலம் உயிர்ப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவி த.ரக்ஷ்மிதா. “ இக்கடுமையான வேலையை யார் சிறு வேலை எனப் பெயரிட்டனர். 60 வயது ஆன M.ராஜேந்திரன் தனது வாழ்வில் 45 ஆண்டுகளை பீடி சுற்றுவதில் கழித்துள்ளார். ஆயிரம் கட்டுகளை கொண்ட ஒரு பண்டல் மூலம் 250 ரூபாய் லாபம் கிடைக்கும்.” என்கிறார்.

இதை ஒருங்கிணைத்த பழனிகுமார் இந்த கண்காட்சி பற்றி கூறுகிறார். இவர் லண்டனில் நடைபெற்ற கோலம் எனும் புகைப்பட கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. “இந்த கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி மீது அதிக நாட்டம் வந்துள்ளது, காரணம் தங்கள் பெற்றோர்களின் பணியிடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதன் மூலம், அவர்களின் வலியையும் வாழ்க்கையும் உணர்கின்றனர். மேலும், கல்குவாரியில் பணியாற்றும் தன் தந்தையின் கதையை முகேஷ் ஆவணம் செய்துள்ளார். அவர் வேலூர் மாவட்ட மாதிரி பள்ளியில் படிக்கிறார். இந்த சொல்லப்படாத கதைகளை யார் ஆவணப்படுத்துவது? நம் கதைகளை நாம் தான் கூற வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும். தமிழக அரசு இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் நடத்த ஆதரவு கிடைத்தால், இன்னும் சிறப்பாக செய்வோம். இதை பலரும் பார்வையிட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
கூடுதலாக, இந்த புகைப்படங்கள் போஸ்ட் கார்டுகள் வடிவில் மிக சொற்ப விலை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தில் பிப்ரவரி 16-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.










