காடு… நந்தவனம்… வறண்ட பூமி… உங்கள் முதலீடு எதில் இருந்தால் லாபம்..?

”நாம் இப்போது ட்ரம்ப் 2.0 காலத்தில் இருக்கிறோம். ஆனால், அதில் இந்தியா சிக்காமல் தப்பி விடும் என்றும், நம் ஜி.டி.பி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றே கணிப்பு கள் கூறுகின்றன. எனவே, பதற்றமான சந்தைச் சூழல்கள் நிலவினாலும் அஸெட் அலொகேஷன்படி முதலீடு செய்தால் நம் நிதி நிலைமையைச் சிறப்பாக்கிக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம்..!’’

ஆர்.குருராஜன், சோம.வள்ளியப்பன், மகேஷ்குமார்

பிப்ரவரி 9-ம் தேதி சேலத்திலும் 10-ம் தேதி திருப்பூரிலும் நாணயம் விகடன், இன்டகிரேட்டட் மற்றும் என்.எஸ்.டி.எல் நிறுவனங்களுடன் இணைந்து ‘அஸெட் அலொகேஷன்… செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா’ என்ற தலைப்பில் முதலீட்டாளர் கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த நிகழ்ச்சிகளில் நிதி நிபுணர் மற்றும் பேச்சாளரும் எழுத்தாளருமான சோம.வள்ளியப்பன் சிறப்புரை வழங்கியபோதுதான் மேற்கண்ட கருத்தைச் சொல்லி முதலீட்டாளர் களுக்கு நம்பிகையூட்டினார்.

இந்த நிகழ்ச்சிகளில் இன்டகிரேட்டட் நிறுவனம் சார்பாக ஆர்.குருராஜன் பேசினார். என்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் சார்பாக, செபி எம்பேனல்ட் பயிற்சியாளர் மகேஷ்குமார் பேசினார். டீமேட் மற்றும் வர்த்தகம் சார்ந்த அடிப்படையான விஷயங்களைப்பேசிய மகேஷ்குமார், “இன்னமும் நிறைய பேர் பிசிக்கல் பங்குப் பத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு டீமேட் என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கிறது. அதற்காகவே இது போன்ற விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் மிகவும் அவசியமாக உள்ளன” என்றார்.

திருப்பூரில்…

‘‘நிதித் திட்டமிடலில் பிள்ளையார் சுழி போடுவது போன்றது காப்பீடு எடுப்பது’’ என்று பேசத் தொடங்கிய இன்டகிரேட்டட் ஆர்.குருராஜன், “காப்பீடு எடுக்கும்போது நம்முடைய முழுமையான மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட்டு, அந்த மதிப்புக்குக் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்து பெருக்கு வதற்கு முன், பணத்தை இழந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைச் சூழல், பொருளாதாரச் சூழல் எல்லாமே மிக சவாலானவை. எனவே, தேவையான ஆயுள் காப்பீட்டையும், மருத்துவக் காப்பீட் டையும் எடுத்துக்கொள்வதன் மூலம்தான் நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாது காத்துக்கொள்ள முடியும்” என்று பேசினார்.

சோம. வள்ளியப்பன் பேசும்போது, “நாணயம் விகடன் சார்பாக பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட் பற்றிதான் நிகழ்ச்சி நடத்து வது உண்டு. தற்போது அஸெட் அலொகேஷன் தலைப்பில் நிகழ்ச்சி நடத்துவது வரவேற்கத்தக்க ஒன்று.

ஒரு முறை சாயாவனம் நூலாசிரியர் கந்தசாமி ஐயாவைப் பார்த்தேன். அவர் சொன்னார், ‘நான் இவ்வளவு வருடம் வாழ்வேன் என்று நினைக்கவில்லை’ என்று. உண்மையில் நாம் நமது வாழ்நாள் காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அதனால் நாம் முதலீடுகள் பற்றியும் சிந்திப்பதில்லை. அது எவ்வளவு தவறு என்பது பிறகுதான் புரியும். எனவேதான் முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கை செய்வதற்காக, இது போன்ற கூட்டங்களை நாணயம் விகடன் நடத்துகிறது.

சேலத்தில்…

முதலீட்டுச் சந்தையில் மூன்று விதமான நிலப்பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, ஒழுங்கு படுத்தப்படாத அடர்ந்த காடு, இன்னொன்று, சரியாகக் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்ட செழுமையான நந்தவனம், மூன்றாவது, எதுவும் இல்லாத வறண்ட பூமி. நம் முதலீடுகளை எந்த இடத்தில் போடுவதற்கு விரும்புகிறோம் என்பது முக்கியமானது. செழிப்பான மலர்களும் கனிகளும் கொண்ட நந்தவனம்தான் அஸெட் அலொகேஷன்.

இங்கு ரியல் எஸ்டேட், தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் என எல்லாமே இருக்கும். பிட்காயின் போன்றவை அடர்ந்த வனம் போன்றவை; உள்ளே போனால் வெளியே வர முடியாத அளவுக்கு ரொம்ப ரிஸ்க்கானது. சில வறண்ட பூமிகளும் உண்டு. பல மோசடி திட்டங்கள் போல. அவற்றில் பணத்தைப் போட்டால் ஒன்றும் மிஞ்சாது. எப்போதுமே முதலீட்டை சரியான முறையில் திட்டமிட்டுப் பிரித்து முதலீடு செய்து உங்கள் வாழ்க்கையை மேம் படுத்திக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்.

பிறகு, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் தங்கம், பங்குச் சந்தைகளில் ஏற்படும் ஏற்றம் இறக்கம் பற்றிய பல கேள்விகளைக் கேட்க, நிபுணர்கள் பதில் அளித்தார்கள்.