“விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க காரணம்… மத்திய அரசு ஏஜென்ஸிகளின் ரிப்போர்ட்…” – அண்ணாமலை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அண்ணாமலை பேசும்போது, “தி.மு.க ஆட்சியில் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் உயிர், உடைமை ஆகியவற்றைக் காப்பாற்றுவதுதான் கடமை எனச் செயல்படுகிறார்.

மலரஞ்சலி

சீனா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து வந்தாலும் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்வது இனி நடக்காது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சி மண்ணோடு மண்ணாகத் துடைத்து எறியப்படும்.

முதலமைச்சர் இப்போதும் 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மக்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் 200 இடங்களைப் பிடிப்போம் என்று  23-ம் புலிகேசி போலப் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார். பிறகுச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, “கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைப்போம்.

மலரஞ்சலி கூட்டம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்குவோம். த.வெ.க தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளது. இதற்கு முன்பு கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த பாதுகாப்பு இருக்கிறது. அவர்களைப் போலத்தான் விஜய்க்கும் Y பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

விஜய்யால் ஆளுநரைச் சந்திக்க வர முடியவில்லை. பரந்தூர் மக்களைச் சந்திக்கச் செல்ல முடியவில்லை என்பதை மத்திய அரசின் ஏஜென்ஸிகள் கண்காணித்து ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். மாநில அரசு ஏன் விஜய்க்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை. பொது இடத்துக்குச் செல்லும்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும்போது, தமிழக முதலமைச்சர் ஏன் இதைச் செய்யவில்லை. நடிகர் விஜய் பா.ஜ.க-வுக்கு எதிராகத்தான் கருத்து வைக்கிறார். ஆனாலும் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம். முதலமைச்சர் கீழே இறங்க ஆரம்பித்துவிட்டார்.

அண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலே ஏற ஆரம்பித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில்  சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் இணைந்து தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளுவார்கள். தமிழக முதலமைச்சர் எவ்வளவு குட்டி காரணம் அடித்தாலும், பிரதமரின் வாக்குறுதியைத்தான் மக்கள் நம்புவார்கள். உதவித் தொகை கொடுப்பதால் மக்கள் அடிமையாக இருப்பார்கள் என்று நினைப்பது  தவறு” என்றார்.