திமுக சேர்மன் மீது முறைகேடு புகார்; பேராவூரணி பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி ரேூராட்சி தி.மு.க சேர்மன் சாந்தி. இவரது கணவர் சேகர் தி.மு.க நகரச்செயலாளர். சேகரின் தந்தையும், சாந்தியின் மாமனாருமான செல்வராஜ், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் துணை செயலாளர். இந்த நிலையில் சேர்மன் ரத்த சொந்தங்களுக்கு பேரூராட்சி ஒப்பந்த பணிகள் ஒதுக்கக் கூடாது என்ற விதியை மீறி சேகர், செல்வராஜிக்கு பல பணிகள் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. செல்வராஜ் சொல்கிறபடி சாந்தி இதை செய்துள்ளார்.

திமுக சேர்மன் சாந்தி சேகர்

புதிய பாலம் கட்டாமல் கட்டியதாகவும், வார்டுகளில் ரெட்மிக்ஸ்மண் அடித்ததாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பேராவூரணி பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆறு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க, பேரூராட்சி இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அதிகாரிகள் பேரூராட்சியில் ஆய்வுகள் செய்தனர். இதையடுத்து பேரூராட்சி இயக்குநரக உயர் அதிகாரிகளின் விசாரணையில், முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர். மேலும், முறைகேடுகளில் செயல் அலுவலர் பழனிவேலுக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்தனர். இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது செல்வராஜ் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

பேராவூரணி பேரூராட்சி சேர்மனின் மாமனார் செல்வராஜ்

தி.மு.க தலைமை சாந்தி, சேகர், செல்வராஜ் மூன்று பேரையும் அழைத்து கடுமையாக கண்டித்தது. `இவ்வளவு நடந்திருக்கு எங்கள் கவனத்துக்கு கொண்டுவரவில்லை’ என எம்.எல்.ஏ அசோக்குமாரிடமும் கடிந்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் வழக்கு தொடர்ந்த செந்தில்குமாரையும் சமாதானம் செய்தனர். இந்த நிலையில் பேரூராட்சி மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பதை கேட்டு, அண்மையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அன்பரசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர், வழக்கு தொடுத்த நீலகண்டன் என்பவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை சோதனை செய்தனர். சாலை, பாலம் உள்ளிட்டவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரண நடந்துள்ளது. தற்போது முதற்கட்ட விசாரணை தான் நடந்துள்ளது. இதில் சேர்மன் சாந்தி, சேகர், செல்வராஜ் என யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. அடுத்ததாக மூவரிடமும் விசாரணை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் பேராவூரணி தி.மு.க வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.