தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் துணை இராணுவப்படையின் பாதுகாப்பை வழங்கும். இந்த பாதுகாப்பு அமைப்பு X, Y, Z, Z+, Y+ என வேறுபடும். நடிகர்களில் ஷாரூக்கான், சல்மான் கான், கங்கனா ரணாவத் போன்றோருக்கு இந்த வகை பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கட்சி தொடங்கி அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் விஜய்க்கும் ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு முறையின் படி 8 முதல் 11 துணை இராணுவ வீரர்கள் எப்போதும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என கூறப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டி விவகாரம் தொடர்பாக விஜய் ஆளுநரை சந்தித்த சமயத்திலேயே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர் தவெக வட்டாரத்தினர். பிப்ரவரி 23 ஆம் தேதியோடு ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் விஜய், பிப்ரவரி 26 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிருக்கிறார். அதை முடித்துவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கான திட்டமும் வைத்திருக்கிறார்.

விஜய் தரப்பு துபாயை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் பாதுகாப்புப் படையைத்தான் அவருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தி வருகிறது. சுற்றுப்பயணம் செல்கையில் இன்னும் கூடுதலாக பாதுகாப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்பதன் அடிப்படையிலேயே இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பனையூர் வட்டாரத்தினரிடம் பேசுகையில், ‘பாதுகாப்புப் படை வேண்டி கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால், இன்னும் அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எங்கள் கைக்கு எந்த உத்தரவும் வந்து சேரவில்லை.’ என்றனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play