Blair House : பிரதமர் மோடி அமெரிக்காவில் தங்கும் உலகின் பிரத்யேகமான ஹோட்டல்! – அப்படி என்ன சிறப்பு?

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். இன்று அமெரிக்காவில் தரையிறங்கிய பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையின் சர்வதேச விருந்தினர்கள் தங்கும் பிளேர் ஹவுஸ் ( Blair House) என்ற ஹோட்டலில் தங்குகிறார்.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த ஹோட்டல் பற்றி காணலாம்.

உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த ஹோட்டல்

பிளேர் ஹோட்டலை உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த ஹோட்டல், “world’s most exclusive hotel” என்று அழைக்கின்றனர்.

இங்கு தங்கிச் சென்ற பிரபலமானவர்களின் பட்டியல் நம்மை ஆச்சர்யப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதிகள் ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன், இந்திய பிரதமர் இந்திரா காந்தி முதல் உலக தலைவர்கள், அரச குடும்பத்தினர் எனப் பலர் இங்கு தங்கியுள்ளனர்.

பிளேர் ஹவுஸ்

வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவிலேயே அதற்கு எதிராக பிளேர் ஹோட்டல் அமைந்துள்ளது. 1651, பென்சில்வேனியா அவென்யு என்பது இதன் முகவரி. 1824ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹோட்டல் ஆரம்பம் முதல் வெள்ளை மாளிகையின் விருந்தினர் வீடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தங்குவது அமெரிக்காவின் விருந்தோம்பலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

வசதியான இந்த ஹோட்டல் 70,000 ச.அடி பரப்பில் அமைந்துள்ளது. இது ஒரே கட்டடமாக இல்லாமல் நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட டவுன்ஹவுஸ்களால் ஆனது.

இதில் 119 அறைகள், 14 விருந்தினர் அறைகள் 35 குளியலறைகள், உணவருந்தும் அறை, பிரத்யேகமான சலூன், ஓவிய அறை, நூலகம் ஆகியவை உள்ளன.

பழமையான மர ஃபர்னிச்சர்கள், கலைப்பொருட்களால் ஆன அலங்காரங்கள், அமெரிக்க வரலாற்றை சித்திரிக்கும் ஓவியங்கள், கலைப்படைப்புகளால் நிறைந்திருக்கிறது பிளேர் ஹோட்டல்.

பல வரலாற்றுத் தலைவர்களின் சந்திப்பும், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வுகளும் இங்கு நடந்துள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இங்கு அதிகமான உலக தலைவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதிபர் ட்ரூமேன் கொலை முயற்சி இங்கு நடைபெற்றது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி பிளேர் ஹோட்டலில் இந்திய கொடி அமைக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் இந்த பயணம் ட்ரம்ப் மோடியிடையே 2016-20 காலத்தில் இருந்த நட்பை மீட்டுருவாக்கம் செய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.