சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட தாவாந்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த அழகரசன் மகன் கந்தகுரு வழக்கம் போல நேற்று முதல் நாள் மாலை பள்ளி பேருந்தில் வீடு திரும்பி உள்ளார்.
அப்போது பேருந்தில் இருக்கை கைப்பற்றுவது தொடர்பாக கந்தகுருவுக்கும் சரவணன் என்கிற மாணவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சரவணன் தள்ளிவிட்டதில் கந்தகுரு பேருந்தில் இருந்த கம்பியில் மோதி மயக்கம் அடைந்துள்ளார். இதைடுத்து பேருந்து ஓட்டுநர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மயக்கமடைந்த மாணவன் கந்தகுருவை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது மாணவனுக்கு சுயநினைவு திரும்பாததால் உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கந்தகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து, எடப்பாடி காவல் நிலைய போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவன் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து இருக்கைகாக இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.