தஞ்சை: கல்லாவை குறிவைத்த கொள்ளையர்கள்; ஒரே இரவில் 5 கடைகளில் திருட்டு; அச்சத்தில் வணிகர்கள்!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி காலனி பகுதியில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், மளிகை, பேக்கரி, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். நேற்று இரவு வழக்கம் போல் உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்று அதிகாலையில் திறந்திருந்துள்ளது. ஆனால் கடை இருட்டாக இருந்துள்ளது.

திருடர்கள்

இதை பார்த்த அக்கடை உரிமையாளரின் நண்பர் ஒருவர், அவருக்கு போன் செய்து விடியற்காலையிலேயே கடையை திறந்து விட்டீர்கள் என்ன விசேஷம்னு கேட்டுள்ளார். என்னப்பா சொல்ற நான் வீட்டில் இருக்கேன். கடை திறந்திருக்கானு கேட்டு அதிர்ச்சியடைந்தவர், கடைக்கு அலறியடித்து ஓடி வந்து பார்த்திருக்கிறார். இதில் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின்னர் தான் அருகருகே உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் இதேபோல் கைவரிசை காட்டிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்க மோப்ப நாயுடன் வந்து விசாரணை மேற்கொண்டனர். சிறுது நேரம் சென்ற மோப்ப நாய் பின்னர் நின்று விட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கடைக்குள் கல்லாவில் பணத்தை திருடும் கொள்ளையன்

இதில், இரண்டு மர்ம நபர்கள் ஹெல்மெட், முக கவசம், காலில் ஷு, குளிருக்கு ஸ்வட்டர் அணிந்தபடி ஒரு டூவீலரில் வந்து நோட்டமிடுகின்றனர். பின்னர் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று கல்லாவை திறந்து பணத்தை திருடி செல்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய வணிகர்கள் சிலர், “இ.பி காலனி பகுதிகளில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நிறைய நடந்துள்ளது. இதை செய்த குற்றவாளிகளை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. இந்த நிலையில், மர்ம நபர்கள் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், ஸ்டுடியோ உள்ளிட்ட கடைகளில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருட்டு நடந்த கடையில் போலீஸ் விசாரணை

ஸ்டுடியோ கல்லாவில் பணம் இல்லாததால் கேமராவை திருடிச் சென்றுள்ளனர். மற்ற கடைகளில் கல்லா மட்டும் கொள்ளையர்கள் குறி வைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மற்ற பொருட்களை எடுக்கவில்லை. உடனடியாக திருட்டில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வணிகளிடம் நிலவும் அச்சத்தை போலீஸ் போக்க வேண்டும்” என்றனர்.