விஜய்யையும், ஆதவ் அர்ஜுனாவையும் குறிப்பிட்டு நடிகர் தாடி பாலாஜி வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரலாகி பேசுபொருளாகியிருந்தது.
திரைப்பட நடிகரும், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்பவே பரிச்சயமானவருமான தாடி பாலாஜி ஆரம்பத்தில் தன்னை ‘தி.மு.க’ அனுதாபியாகக் காட்டிவந்தார். பிறகு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும் அவர் பக்கம் சாய்ந்தார். ‘த.வெ.க’ பொதுச் செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் தொடங்கினார். ‘த.வெ.க’வின் முதல் மாநாட்டு வேலைகளில் பணியாற்றியவர், விஜய் படத்தைத் தன் மார்பில் பச்சை குத்தியெல்லாம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிப்பவர்களைக் கொஞ்சம் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்தும் வந்தார்.

ஆனால், விஜய் கட்சி நிர்வாகிகளை அறிவிக்கத் தொடங்கியதிலிருந்தே தாடி பாலாஜி அமைதியாகிவிட்டார். ‘த.வெ.க’வின் நிகழ்ச்சிகள், கூட்டம் உள்ளிட்டவற்றில் பெரிதும் அவரைப் பார்க்க முடிவதில்லை. தாடி பாலாஜிக்கும் இதுவரை எந்தவொரு பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த பிப் 4ம் தேதி அன்று, தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை வரவேற்கும் வீடியோவையும் கூடவே விஜய் பெயரைத் தன் நெஞ்சில் பச்சை குத்தியதையும் ஒப்பிட்டு, ‘அவளோ புது பாய் ஃபிரண்டுடன் சந்தோஷமாக இருக்கிறாள், நானோ தற்குறியாக அவளது நினைவிலேயே இருக்கிறேன்’ என்று மீம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, ‘தாடி பாலாஜிக்குப் பொறுப்பேதும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் மன வருத்தத்தில் இருக்கிறார்’ என்று சர்ச்சையானது.
தற்போது இது குறித்து காணொலியில் விளக்கமளித்திருக்கும் தாடி பாலாஜி, “2-3 நாளாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிய விஷயத்தை எல்லோரும் பகிர்கின்றனர். யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியதை நான் எதேச்சையாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தேன். அது இப்படியொரு விவாதப்பொருளாகும் என்று எனக்குத் தெரியாது. எனது நண்பரும், ‘த.வெ.க’வின் தலைவருமான மரியாதைக்குரிய விஜய் கட்சி தொடங்கும்போது நான் என்ன சொன்னேன் என்றால், ‘அவரது நண்பராக நான் பணியாற்றுகிறேன். அவர் நல்லபடியாக வர வேண்டும். அந்த கட்சி நல்லபடியாக வளர வேண்டும்’ என்று கூறினேன்.

பதவியை எதிர்பார்த்தோ, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ நான் பணி செய்யவில்லை. இன்று தைப்பூச திருநாளில் நான் ஓப்பனாக சொல்கிறேன். யாருக்கு புரியுதோ இல்லையோ நான் கும்பிடும் கடவுளுக்கு புரியும். எனது நண்பரும், ‘த.வெ.க’வின் தலைவருமான விஜய்க்குப் புரியும். ஏனென்றால், விஜய் எல்லோருடைய பேச்சையும் கேட்டு அதை அனலிசஸ் பண்ணமாட்டார். அவரே ஒரு முடிவு எடுப்பார். அந்த முடிவு சரியாக இருக்கும். அதனால்தான் அவர் இன்று அரசியல் பயணம் செய்கிறார்.
தலைவருக்குத் தெரியும், ‘பாலாஜிக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன கொடுத்தால் பாலாஜி இன்னும் பலமாக ஓடுவார்’ என்று அவருக்கு தெரியும். தைப்பூச நாளில் சொல்கிறேன். கூடிய விரைவில் என்னுடைய நண்பரும், தலைவருமான விஜய்யிடம் இருந்து ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பில் இருந்து என்னுடைய ஓட்டம் வேறுவிதமாக இருக்கும். இப்போதும் சொல்கிறேன். நான் பதவிக்காக பணி செய்யவில்லை.

மார்ச் மாதம் தலைவர் (விஜய்) சுற்றுப்பயணம் போகிறார். அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், என்னுடைய தலைவருக்கும் முதல் வாழ்த்துகள். இந்தச் சுற்றுப்பயணம் உங்களுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும். இப்போது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்களின் கட்சியில் தொண்டனாக பயணிப்பதில் எனக்கு சந்தோஷம். தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். எப்போதுமே எனது தலைவருக்காக பணியாற்றி கொண்டே இருப்பேன். மீண்டும் ஒருமுறை எனது நண்பரும், ‘த.வெ.க’ தலைவர் விஜய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs