அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். இப்பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Click here To follow Vikatan WhatsApp Channel : Vikatan WhatsApp Channel
செங்கோட்டையன் கோரவில்லை
இந்நிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீஸார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் காவல் துறையிடம் கோரவில்லை. இருந்தாலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதைத் தவிர்க்க காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் அவர்களாகவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்றனர்.
வீரயுக நாயகன் வேள்பாரியை Audio Formatல் கேட்க Link : இங்கே க்ளிக் செய்யவும்.