`தம்பி… இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்…’ – விசிக வன்னி அரசுக்கு ஜெயக்குமார் பதில்!

சமீபத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு முன்பிருந்த மூன்று இருக்கைகளில், ஒருபக்கம் திருமாவளவனும், மறுபக்கம் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருந்த நிலையில், நடுவில் இருந்த இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஏன் இடைவெளி….?” எனக் கேள்வி எழுப்பிடியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “மதிப்புமிகு அண்ணன் ஜெயக்குமார் அவர்களே நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் முன் என்றைக்காவது இப்படி சமமாக அமர்ந்ததுண்டா? அதுவெல்லாம் ஒரு ‘கார்’ காலம். இன்றைய தலைவர் எடப்பாடியார் அவர்களோ அல்லது நீங்களோ இப்படி சமமாக அமர்ந்த புகைப்படங்களை பகிரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அன்பிற்கினிய தம்பி வன்னியரசு அவர்களே… இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்! திருமாவளவனின் அரசியல் அனுபவத்திலும்-பொதுவாழ்வால் அவருக்கு வந்த நெருக்கடிகளிலும் சிறிய பகுதியைக்கூட தன் வாழ்வில் உதயநிதி பார்த்திருக்க மாட்டார். கல்லூரி காலம் முதல் திருமாவளவனை பார்த்தவன் என்ற முறையில் இந்தக் கேள்வியை எழுப்பினேன்!

விடுதலை சிறுத்தைகளே விரும்பாத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் தி.மு.க அரசை நோக்கி உங்கள் கேள்வியை எழுப்புங்கள்! அதை தான் உங்கள் தொண்டர்களும் விரும்புவார்கள்! மாறாக உதயநிதி போன்ற மன்னர் பரம்பரையின் வாரிசிற்காக எங்களை நோக்கி வசை பாட வேண்டாம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.