1 கி.மீக்கு 50 பைசா தான் செலவு – கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம்

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரெநியூ’ (ReNew) என்ற மாணவர் குழு உள்ளது. இவர்கள் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள ‘ஷெல் இக்கோ-மாரத்தான் – ஆசியா பசிபிக் 2025’ எனும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ள உள்ளனர்.

மாணவர் குழு

இந்த போட்டியில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பிரிவின் கீழ் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே அணியும் இவர்கள் தான். இதற்காக ‘புரோட்டோடைப்’ என்று சொல்லப்படும் முன்மாதிரி ரக 3-சக்கர வாகனம் ஒன்றை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த வாகனத்துக்கு ‘திமி 2.0’ என்று பெயர் வைத்துள்ளனர். 

இதுகுறித்து வாகனத்தை உருவாக்கிய மாணவர்கள் கூறுகையில், “இது மாணவர்களுக்காக  சர்வதேச அளவில் நடைபெறும் போட்டி. இதில் கார்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன் கொண்ட வாகனங்களை வடிவமைத்து உருவாக்க வேண்டும். இந்த போட்டி நாளை பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்ளும் அணிகள் புரோட்டோடைப் வாகனங்களை மின்சாரம் மூலமாகவோ, ஹைட்ரஜன் செல் மூலமாகவோ உருவாக்க வேண்டும். 

நாங்கள் காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் ஒரு வாகனத்தை வடிவமைத்துள்ளோம். பெட்ரோல் வாகனங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு நான்கு ரூபாய் செலவாகும். மின்சார வாகனங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவாகும். ஹைட்ரஜன் வாகனத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே செலவாகும்.

ஹைட்ரஜன் வாகனம்

ஹைட்ரஜன் எரிபொருள் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது. பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் மாசு ஏற்படுத்தாது என்று கூறினாலும், அதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்படும் போது கார்பன் மாசு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக தான் இந்த ஹைட்ரஜன் எரிபொருள் இருக்கிறது.

நாங்கள் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும்  3 சக்கர வாகனத்தை 5 மாதங்களில் உருவாக்கியுள்ளோம். இதில் பொருத்தப்பட்டுள்ள 80% பாகங்கள் நாங்களே தயாரித்துள்ளோம். 20% பாகங்கள் மட்டும் வெளியில்  இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஒரு லிட்டர் ஹைட்ரஜனில் 200 கி.மீ தூரம் செல்லும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 35 கி.மீ ஆகும். இந்த  போட்டியில் வேகத்தை விட மைலேஜ் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மிக குறைந்த கார்பன் உமிழ்வு, அதிக செயல்திறன், மற்றும் நிலையான கட்டமைப்பை கொண்ட வாகனங்கள் போட்டியில் அங்கீகாரம் பெறும்.

ஹைட்ரஜன் வாகனம்

அட்லாண்டிக் ப்ளூ மார்லின் என்கிற மீனின் உருவத்தை முன் மாதிரியாக கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன் பைபர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி ஃபோம் (Upcycled PVC Foam) பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் உறுதித்தன்மை வலுவாகவும் எடை மிக குறைவாகவும் இருக்கும்.  வாகனத்தின் தோற்றம் பெரியதாக இருந்தாலும் எடை 53 கிலோ மட்டுமே.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs