மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற சிறப்பை பெறுகிறார்.

மதுரை மாநகராட்சி

பாரம்பரிய நகரமான மதுரை, நகராட்சியாக இருந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து ஆண் அலுவலர்களே ஆணையர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார்கள். அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஆணையராக நியமிக்கப்பட்ட தினேஷ்குமார் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி கலெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாற்றப்பட்டதால், புதிய ஆணையராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பொறுப்பேற்றுக் கொண்ட சித்ரா விஜயன் கேரளாவைச் சேர்ந்தவர்.  2019 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்  அதிகாரியான இவர், தருமபுரி, திருச்சி மாவட்டங்களில் சப் கலெக்டராகவும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராகவும் பணியாற்றி பின்பு மின் ஆளுமைத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து தற்போது மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

சித்ரா விஜயன்

மீனாட்சியம்மன் ஆட்சி செய்யும் பெருமை கொண்ட மதுரையில் கலெக்டராக சங்கீதா, மேயராக இந்திராணி, மாவட்ட திட்ட இயக்குநராக மோனிகா ரானா, மாநகர காவல்துறை துணை ஆணையராக அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ரேணுகா, மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக ருக்மணி பழனிவேல்ராசன் என பல முக்கிய பொறுப்புகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக சித்ரா விஜயன் பொறுப்பேற்றுள்ளது அனைவராலும் பாராட்டப்படுகிறது.