Rich Dad, Poor Dad புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி அவ்வப்போது பொருளாதாரச் சரிவுகள் குறித்து எச்சரித்து வருவார். அந்த வகையில், இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் பங்குச் சந்தை மிகப்பெரும் சரிவைச் சந்திக்கும் ஆபத்து இருக்கிறது என எச்சரித்திருக்கிறார். இந்த சரிவு, கார், வீடு உள்ளிட்ட முக்கியப் பங்குகளின் பத்திரங்களின் விற்பனையை அதிகரிக்கும். எனவே, முதலீடு செய்பவர்கள், பிட்காயின், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.
கடந்த காலங்களிலும் அவர் இது போன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அதில் பெரும்பாலான கணிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், “அமெரிக்காவின் வானளாவிய கடனால் அமெரிக்க அரசு திவாலாகிவிடும். ஒவ்வொரு 3 மாதத்துக்கும் 1 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். எனவே, தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்யவும்” என்றார். “2023-ம் ஆண்டு அமெரிக்கா அரசின் பொருளாதார மந்த நிலை ஏற்படும்.
அதனால் தங்கம், வெள்ளி, பிட்காயின் பங்குகள் கடுமையான விலை உயர்வில் இருக்கும். இந்த விலை உயர்வுகள், அமெரிக்க டாலரின் மீதான நம்பிக்கை சரிவால் ஏற்படும்” என்றார். 2022-ம் ஆண்டில், பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம், பிட்காயின் கூட குறிப்பிடத்தக்க சரிவை சந்திக்கும் என்றார். இவர் கணித்த அனைத்தும் நடக்கவில்லை என்றாலும், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி, பங்கு சந்தை வீழ்ச்சி போன்ற சில கணிப்புகள் மட்டும் நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.