Elon Musk: “என் மகன் ரோல்ஸ் ராய்சில் பள்ளிக்குச் சென்றான்”- கட்டுக்கதைகளை உடைக்கும் மஸ்க்கின் தந்தை

எலான் மஸ்க் தான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்ததாகவும், அதிக வருமானமில்லாதவர்களைப் போன்ற குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்ததாகவும் பேசியிருக்கிறார். ஆனால் அவரது தந்தை இந்த கருத்துக்கு மாறாக, தான் மிக சிறுவயதிலேயே வெற்றிகரமான நபராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான எலான் பல முன்னணி நிறுவனங்களைக் கொண்டிருப்பதுடன், அமெரிக்க அரசியலிலும் சக்திவாய்ந்த நபராக உருவாகியிருக்கிறார்.

எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலமுறை பேசியிருக்கிறார். சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

இன்ஜினீயரான இவர், பல வகைகளில் அவரது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். சமீபத்தில் அஹ்மத் மஹ்மூத் ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், அவரது இளமைக்கால வெற்றிக்கதையைப் பகிர்ந்துள்ளார்.

எர்ரால் மஸ்க் தான் 26 வயதிலேயே வெற்றிகரமான நபராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த காலத்திலேயே எலான் மஸ்க் பெரிய வீட்டை வாங்கியுள்ளார். இப்போது அந்த வீடு தென்னாப்பிரிக்காவின் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எர்ரால் மஸ்க், “நான் ஒரு கன்சல்டிங் இன்ஜினீயராக எனது பணியைத் தொடர்ந்தேன். இரவிலும் வார இறுதியிலும் கடுமையாகப் பணியாற்றினேன். என்னுடைய நிறைய நண்பர்களுக்கு அப்படி பணியாற்றும் வழக்கம் இல்லை. நான் வேகமாக வளர்ந்தேன். 26 வயதில் 46, 48 வயது நபர்களுக்கு இணையாக இருந்தேன். எனக்கு சொந்த தொழில் இருந்தது. என்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை என்னால் தீர்மானிக்க முடிந்தது. 23 அல்லது 24 வயதிலேயே என்னுடைய முதல் விமானத்தை வாங்கிவிட்டேன்.” எனக் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் தேவையான பணம் இல்லாத, ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்ததாக பரவும் கட்டுக்கதைகளை உடைக்கும்விதமாக, எலான் மஸ்க் பள்ளிக்குக்கூட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரில் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க் தன்னுடைய தந்தை வன்முறையான நபர் என்றும், தனக்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் இல்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலான் மஸ்க், குறைவான வருமானத்தினால் மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவத்தைத் தான் கடந்து வந்ததாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“நான் யாரிடமும் பரம்பரை சொத்தையும் பெறவில்லை, எனக்கு யாரும் மிகப்பெரிய தொகையை பரிசாகவும் தரவில்லை. என் தந்தை சிறிய எலெக்ட்ரிகல்/மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கம்பனியை நடத்தினார். அது 23,30 ஆண்டுகளுக்கு நன்றாக சென்றது. ஆனால் நாங்கள் கடினமான நாட்களையும் எதிர்கொண்டோம். அவர் 25 ஆண்டுகள் திவாலாகிவிட்டார், என்னிடமும் என் சகோதரரிடமும் பொருளாதார உதவிகளை நாடியிருந்தார்” என எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டையும் எர்ரால் மஸ்கின் வார்த்தைகளையும் இணைத்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எலான் மஸ்க் ஆதரவாளர்கள், “பணக்கார வீட்டில் பிறந்தாலும் இரு மாணவருக்கு பணப் பிரச்னைகள் இருந்திருக்கலாம்” என சப்போர்ட் செய்துவருகின்றனர்.