கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் லோகநாதன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் தமிழ்ச்செல்வன் காயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தமிழ்ச்செல்வனின் நண்பர் சூர்யா அவரை நேரில் சென்று பார்த்துள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் லோகநாதனை பழிவாங்க முடிவு செய்தனர்.
அடுத்த நாளே சூர்யா, லோகநாதனை வெள்ளைமொக்கை என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தியுள்ளார். அதன் பிறகு அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களின் இன்னொரு நண்பர் மோகன்ராஜ் என்பவர் இருந்துள்ளனர்.

அவர்கள் மூன்று பேரும் இணைந்து லோகநாதனை அதே பாணியில் கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிறகு லோகநாதனின் கை, கால்களை கட்டி பவானிசாகர் அணை அருகே உள்ள நீர்தேக்கத்தில் வீசியுள்ளனர். நேற்று அவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து உள்ளூர் மக்கள் சிறுமுகை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் லோகநாதனின் உடலை மீட்டு தமிழ்ச்செல்வன், சூர்யா, மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவருமே கூலித்தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
