திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புராஜ் (வயது: 28), இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று காலை அவர் டூவீலரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வாகன நிறுத்துமிடம் அருகே வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அன்புராஜை வழிமறித்து, அவரை சரமாரியாக வெட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த அன்புராஜ் தப்பி ஓட முயன்றபோது, அவரை விரட்டிச் சென்று வெட்டினர். அப்போது, அவர் கையால் வெட்டுகளை தடுத்தார். பின்னர், கழுத்திலும் வெட்டு விழுந்தது. இதனால் நிலைகுலைந்த அன்புராஜ் சரிந்து கீழே விழுந்தார். அதன்பிறகு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. உடனடியாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் அங்கு வந்து அன்புராஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த கொலை குறித்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

அன்புராஜ்
சாலை மறியல்

ஏற்கனவே, நடந்த கோழிச் சண்டையில் ஏற்பட்ட முன் விரோதம், ஸ்ரீரங்கம் கோயில் வேடுபறி நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் ஆகிய காரணங்களால் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட அன்புராஜ், பிரபல ரெளடி திலீப் என்பரின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுவதால், அதுவும் கொலைக்கான பின்னணியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.