US: “கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை” -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

‘அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்’ – இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது அமெரிக்காவில் கிடுகிடுவென நடந்துவருகிறது.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள பிரேசிலை சேர்ந்தவர்களை பிரேசிலுக்கே அனுப்பியுள்ளது அமெரிக்கா அரசு. இந்த சம்பவத்தில் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

அமெரிக்க அரசு தங்களது நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை விமானம் மூலம் அந்தந்த நாட்டிற்கு அனுப்பும் வேலையில் இறங்கியுள்ளது. அப்படி அனுப்பிய பிரேசில் நாட்டை சேர்ந்தவர்களின் கைகளில் கைவிலங்கிட்டு அனுப்பியுள்ளது தான் தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.

தண்ணீர் இல்லை…கழிவறைக்கு அனுமதிக்கவில்லை!

இதற்கு பிரேசிலின் வெளியுறவு துறையும், நீதி துறையும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ‘இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும்’ என்று பிரேசில் வெளியுறவு துறை கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதுக்குறித்து பேசும்போது, ‘விமானத்தில் ஏ.சியில்லாமல் தான் நான்கு மணி நேரம் பயணித்தோம். இதனால், சுவாச கோளாறு உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்தனர்.

மேலும், யாருக்கும் தண்ணீர் கொடுக்கவில்லை. கழிவறை செல்லவும் அனுமதிக்கவில்லை. கைகளும், கால்களும் கட்டப்பட்டு இருந்தன. அமெரிக்காவில் இப்போது சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை குற்றவாளிகளைப் போல பார்க்கிறார்கள்” என்று கூறினார்கள்.

இப்படி பிரேசில் மக்கள் அநாகரிகமாக நடத்தப்படுவதை தவிர்க்க, பிரேசில் பிரதமர் தங்கள் நாட்டு விமானங்களை அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய பிரேசில் மக்களை அழைத்துவர அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

எந்த நாடுகளில் இருந்து மக்கள் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார்களோ, அந்த நாட்டின் மீது டிரம்ப் அதிக வரிகளை விதித்து வருகிறார். இதை தவிர்க்க, கொலம்பியா தங்களது மக்களை அழைத்து வர தங்களது விமானங்களை அனுப்ப உள்ளது. இனி வரிசையாக ஒவ்வொரு நாடுகளும் இந்த நடவடிக்கைகளில் இறங்கலாம்.