மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் – கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு வங்கியில் கடந்த 7-ம் தேதி முகமுடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உல்லால் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க கர்நாடக மாநில போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்தனர்.

கைது செய்யப்பட்ட முருகாண்டியின் தந்தை சண்முகசுந்தரம்

இவற்றில்  3 தனிப்படையினர் தமிழ்நாட்டிலும், ஒரு தனிப்படையினர் கேளர மாநிலத்திலும், மற்றொரு தனிப்படையினர் மங்களூருவிலும் விசாரணை நடத்தினர். மங்களூரு தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டது நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரியைச் சேர்ந்த முருகாண்டி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஜோஷ்வா ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது.  இதனையடுத்து மங்களூரு தனிப்படை போலீஸார் கடந்த  21-ம் தேதி அம்பாசமுத்திரம் பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.

இந்த வங்கிக் கொள்ளை வழக்கில் ஏற்கெனவே மங்களூரு தனிப்படை போலீஸார், நெல்லையை பூர்விகமாகக் கொண்டு மும்பை, செம்பூர் திலக்நகரைச் சேர்ந்த கண்ணன் மணி என்பவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவரிடமிருந்து 2 மூட்டைகளில் ரொக்கப்பணமும், 2 துப்பாக்கிகள், 3 குண்டுகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில்தான் கைதான முருகாண்டியின் பத்மநேரி வீட்டில் தனிப்படை போலீஸார் சோதனையிட்டனர். வீட்டின் பின்புறமுள்ள உரக்கிடங்கில் ஒரு சாக்கு மூட்டையில் தங்க நகைகளையும், தோட்டத்தில் குழி தோண்டி புதைக்க வைக்கப்பட்டிருந்த மற்றொரு மூட்டையில் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீடு

அதே போல் வீட்டிற்குள் தனி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 சூட்கேஸ்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை பதுக்கி வைக்க உடந்தையாக இருந்ததற்காக முருகாண்டியின் தந்தை சண்முகசுந்தரத்தையும் கைது செய்தனர். முருகாண்டியின் தோட்டம், வீடு தவிர வேறு எந்த இடத்திலும் தங்க நகைகள்பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்டு அதை மாநிலம் கடந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் பதுக்கி வைகப்பட்டு மீட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY