அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் ‘எப்போது… என்ன சட்டம் கொண்டுவரப் போகிறார்?’ என்று உலக நாடுகள் தொடங்கி அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் வரை ஒருவித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.
டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நான் அதிபராகப் பதவியேற்றால் அமெரிக்காவிற்குள் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைப்பேன். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன்’ என்பதைக் கூறிக்கொண்டே இருந்தார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இது முக்கியமான ஒன்று.
கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதாக அறிவித்த உடனேயே, ‘டிரம்ப் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பே, உங்கள் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பி வந்துவிடுங்கள்’ என்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு மெயில் அனுப்பியது. அந்தளவுக்கு பல்கலைக்கழகம் தொடங்கி மாணவர்கள் வரை டிரம்ப் என்ன சட்டம் கொண்டுவரப்போகிறார் என்ற பயத்தில் உள்ளனர்.

அமெரிக்க உயர் படிப்பு குடியேற்ற வலைதளத்தின் படி, அமெரிக்காவில் கிட்டதட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்காமல் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் தாங்கள் பார்த்துவரும் பகுதி நேர வேலைகளை விட்டு வருகின்றனர்.
எஃப்-1 விசா மூலம் அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வாரத்திற்கு 20 மணி நேரம் வரை வேலை செய்யலாம். இதையும் தாண்டி, சில மாணவர்கள் பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வேலை செய்கிறார்கள்.
காரணம், இவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்காக சொந்த நாட்டில் வாங்கியுள்ள கடன் கொஞ்ச நஞ்சமல்ல. அதையும் பார்த்துக்கொண்டு, மாத செலவையும் பார்த்துகொள்ள வேண்டுமானால், அவர்கள் கண்டிப்பாக பகுதி நேர வேலையை நம்பித்தான் ஆக வேண்டும்.
தற்போது டிரம்ப் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை அகற்றுவதில் முனைப்புடன் இருக்கிறார். இதனால், சட்டத்திற்கு புறம்பாக தாங்கள் பார்க்கும் பகுதி நேர வேலை செய்வது ஒருவேளை சிக்கலாக அமைந்துவிடுமோ என்று மாணவர்கள் தங்கள் பார்த்துகொண்டிருக்கும் பகுதி நேர வேலைகளை விட்டு வருகின்றனர். இதில் இந்திய மாணவர்களும் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.