மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாகப் படகுகளில் வந்து தாக்குதல் நடத்தினர். தாஜ்மஹால் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உட்பட முக்கியமான இடங்களில் 60 மணி நேரம் நடத்திய இத்தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். மும்பை போலீஸ் பிரிவில் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தஹாவூர் ராணா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர நீதிமன்றத்தில் தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து ராணா மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால் அந்த நீதிமன்றமும் ராணாவை நாடு கடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து இறுதி முயற்சியாக ராணா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தான். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற அடுத்த நாளில் ராணாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் இருக்கும் ராணா அடிப்படையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஆனால் கனடா குடியுரிமை பெற்றுள்ளார். ராணாவின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமெரிக்க அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எலிசபெத், மனுதாரர் ராணாவின் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதோடு நாடு கடத்தல் வழக்கில் ராணா நிவாரணம் பெறத் தகுதியற்றவர் என்றும் வாதிட்டார். ராணா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து சிகாகோ நீதிமன்றம் தன்னை விடுதலை செய்து இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த அமெரிக்க அரசு வழக்கறிஞர் எலிசபெத், அவரது மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஜனவரி 21 ஆம் தேதி ராணாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இனி ராணா அமெரிக்காவில் வேறு எந்த நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது.
இதுவே கடைசி வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால் அங்கு அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து ராணா எந்நேரமும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் சேர்ந்து ராணா மும்பை தாக்குதலுக்குச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs