தஞ்சை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் தஞ்சை, தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள், விளையாட்டு வீரர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
`2026 சட்டசபை தேர்தலில்..’ -ஆர்.காமராஜ்
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசும்போது, “தஞ்சையின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி தான் காரணம். சிறுவயதில் தான் பெற்ற கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைப்போம்” என்றார்.
`மீண்டும் ஏமாற்றுவார்கள்..’ -தங்கமணி
பின்னர் பேசிய தங்கமணி, “இன்றைக்கு தமிழக மக்கள் பொருளாதாரம், கல்வியில் முன்னேறி சிறந்து விளங்குவதற்கு எம்.ஜி.ஆர் தான் முக்கிய காரணம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.முக. 2 ஆக பிளவுபட்டது. பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றாக இணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியவர் ஜெயலலிதா. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம், ஸ்கூட்டருக்கு மானியம், மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த திட்டங்களை எல்லாம் முதல் அமைச்சர் ஸ்டாலின் நிறுத்திவிட்டார். பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க மக்களை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் டெல்டாக்காரர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் டெல்டா மாவட்ட மக்களை மறந்துவிட்டார்கள். டெல்டா மாவட்ட மக்களுக்கு திமுக என்ன செய்தது. ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
டெல்டா மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்தையும் அதிமுக தான் செய்து கொடுத்தது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக திகழ்வதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். தேர்தல் நேரத்தில் மீண்டும் தி.மு.க.வினர் பொய் வாக்குறுதியை கொடுப்பார்கள். இதை நம்பி மக்களும் ஏமாந்துவிடாமல் 2026-ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தி.மு.க.வுக்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.