`4,500 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும்!’- பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்; சிக்கிய பெண் வி.ஏ.ஓ

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “வீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்யவேண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த மனு, அப்பகுதி வருவாய் கிராமத்திற்குட்பட்ட ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி‌யின் பரிசீலனைக்கு வந்துள்ளது.

அப்போது பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த குமாரவேலுவிடம், பட்டா மாறுதல் செய்துகொடுக்க தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என வி.ஏ.ஓ. பத்மாவதி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குமாரவேல் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என பதில் கூறியிருக்கிறார். இதையடுத்து லஞ்சம் தொடர்பாக பேரம் பேசிய வி.ஏ.ஓ. பத்மாவதி, 5000 ரூபாயாவது லஞ்சம் தந்தால்தான் பட்டா பெயர் மாற்றம் செய்யமுடியும் என கூறியுள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பமில்லாத குமாரவேல் பட்டா பெயர் மாற்றுவதற்கு வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்டது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், வி.ஏ.ஓ. பத்மாவதியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். அதன்படி ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற

குமாரவேல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியபடி ரசாயனம் தடவிய ரூ.4500 நோட்டுகளை வி.ஏ.ஓ. பத்மாவதியிடம் கொடுத்தார். வி.ஏ.ஓ. பத்மாவதி பணத்தை வாங்கிய நேரத்தில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து வி.ஏ.ஓ.பத்மாவதி கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்” என்றனர்.