ஒரு சாதாரண குடும்பம் வீடு மாறுவது என்றாலே, ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கும். ஏற்கெனவே அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். அதன்பிறகு பெயின்ட் அடித்து, வீட்டை சுத்தம் செய்து மின்விசிறி முதல் ஃபர்னீச்சர் வரை எல்லாவற்றையும் மாற்றிவிட்டு புதிதாகக் குடியேற ஒரு வாரமாவது ஆகும்.
ஆனால், உலகின் சக்திவாய்ந்த மனிதராகக் கருதப்படும் அமெரிக்க அதிபர், வெள்ளை மாளிகையில் ஐந்தே மணி நேரத்தில் குடியேறிவிடுகிறார். ஆம், பழைய அதிபர் வெளியேறி, புதிய அதிபர் குடியேறும் நடைமுறை வெறும் ஐந்து மணி நேர இடைவெளியில் நடந்து முடிந்துவிடும். அமெரிக்காவின் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.
எண் 1600, பென்சில்வேனியா அவென்யூ, வாஷிங்டன். இதுதான் வெள்ளை மாளிகையின் முகவரி. அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் ஜனவரி 20-ம் தேதியே, அவர் இந்த மாளிகையில் குடியேறிவிடுகிறார். பழைய அதிபரும் புதிய அதிபரும் ஒன்றாக லிமோசின் காரில் கிளம்பி, பதவியேற்பு விழாவுக்காக கேபிடல் கட்டடத்துக்குச் செல்லும்போது இந்த வீடு மாறும் நடைமுறை ஆரம்பிக்கும். பதவியேற்பு முடிந்து, புதிய அதிபர் உரை நிகழ்த்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விருந்தை முடிக்க ஐந்து மணி நேரம் பிடிக்கும். அதன்பின் அவர் நேராக வெள்ளை மாளிகைக்கு வருவார். அப்போது அவர் உடை மாற்றிக்கொண்டு குடும்பத்தினருடன் உரையாட வசதியாக எல்லாம் தயாராக இருக்கும். அவரது குடும்ப புகைப்படங்கள் அங்கு சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும்.
வெள்ளை மாளிகையில் மொத்தம் ஆறு மாடிகளில் 132 அறைகள் உள்ளன. இந்த இடைப்பட்ட ஐந்து மணி நேரத்துக்குள், அத்தனை அறைகள், வராண்டாக்கள், ஜன்னல் கதவுகள், மாடிப் படிகளின் கைப்பிடிகள் உள்பட எல்லாவற்றையும் ஊழியர்கள் சுத்தம் செய்து முடிப்பார்கள். புது அதிபர் குடும்பம் வந்ததும் ஓய்வெடுப்பதற்கான அறைகள் முதல், அவர்கள் சாப்பிடுவதற்கான உணவு தயாரிக்கும் பொருட்கள் வரை எல்லாமே இந்த இடைப்பட்ட நேரத்துக்குள் ரெடி செய்யப்படும். பாத்ரூமில் வைக்கும் டூத் பேஸ்ட் முதல், அதிபரின் அலுவலக அறையான ஓவல் ஆபீஸின் நாற்காலி வரை எல்லாமே மாற்றப்படும். இந்த எல்லாப் பணிகளையும் செய்வது, வெள்ளை மாளிகை பராமரிப்புப் பணியில் இருக்கும் 100 ஊழியர்கள்.
நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் முடிந்ததுமே, அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். அப்போதே வெள்ளை மாளிகை அதிகாரிகள், புது அதிபரின் குடும்பத்தைத் தொடர்புகொள்வார்கள். அவர்களின் ரசனைக்கு ஏற்றபடி வெள்ளை மாளிகையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பார்கள். வெள்ளை மாளிகையின் கலெக்ஷனில் நிறைய ஃபர்னீச்சர்கள் இருக்கும். அதிலிருந்து அவர்கள் ஃபர்னீச்சர்களைத் தேர்வு செய்யலாம். உட்காரும் சோபா முதல், ஜன்னல் திரைச்சீலை வரை எல்லாமே அவர்கள் சொல்வதுபடி தேர்வு செய்யப்படும்.
பழைய அதிபர் ஜோ பைடனின் பெரும்பாலான பொருட்கள் முன்கூட்டியே பேக் செய்து வைக்கப்படும். கடைசி நாளில் அவர் விடைபெற்று வெளியேறியதும், மற்ற பொருட்களும் பேக் செய்யப்படும். வெள்ளை மாளிகையின் ஓரமாக வந்து காத்திருக்கும் ட்ரக்குகள் உள்ளே கொண்டு வரப்பட்டு, அவற்றில் அவை ஏற்றப்படும். பதவி விலகியதும் அவர் செல்லும் வீட்டுக்கு அவை கொண்டு செல்லப்படும்.
ட்ரம்ப் கடந்த முறை பதவி விலகியதும், ஃபுளோரிடா சென்று தனது பீச் ரிசார்ட்ஸில் குடியேறினார். அங்கிருந்து அவர் குடும்பத்தினரின் பொருட்கள் அனைத்தும் ஒரு வாரம் முன்பே கன்டெய்னரில் ஏற்றப்பட்டு வாஷிங்டன் வந்து சேர்ந்துவிட்டன. ஆனால், அவர் அதிபராகப் பதவியேற்கும் வரை அவற்றை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அவை கன்டெய்னரில் வைக்கப்பட்டு வெளியில் காத்திருக்கும். அவற்றுக்கு சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு தருவார்கள். விழாவில் அவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் அதே நேரத்தில், அந்த கன்டெய்னர்கள் வெள்ளை மாளிகைக்குள் வரும். அவை திறக்கப்பட்டு எல்லா பொருட்களும் உள்ளே எடுத்துச் செல்லப்படும்.
வெள்ளை மாளிகையில் ஒரே ஒரு லிஃப்ட் மட்டுமே உள்ளது. அங்கிருக்கும் 100 ஊழியர்கள்தான் எல்லாப் பணிகளையும் செய்ய வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநபர்களை இதில் பயன்படுத்த முடியாது. பழைய அதிபரின் பொருட்களை வெளியில் எடுத்துவிட்டு, தரை விரிப்புகள் முதல் ஃபர்னீச்சர்கள் வரை எல்லாவற்றையும் மாற்றி, புது அதிபரின் பொருட்களை உள்ளே செட் செய்துவைக்க வேண்டும். ஐந்தே மணி நேரத்தில் இதையெல்லாம் செய்வதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
வெள்ளை மாளிகையின் இரண்டாவது மாடியில்தான் அதிபர் குடும்பம் வசிக்கும். 16 அறைகளும் 6 குளியலறைகளும் கொண்ட இந்த இரண்டாவது மாடியை, கிட்டத்தட்ட ட்ரம்பின் வீடு போல தோற்றமளிக்கும் விதத்தில் மாற்றுவது வெள்ளை மாளிகை ஊழியர்களின் கடமை. இவ்வளவு காலம் ஜோ பைடன் இங்குதான் வசித்தார். ஆனால், ட்ரம்பின் குடும்பம் பெரியது. அதனால் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைகளையும் அவர் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்.
ட்ரம்ப் இப்போது தன் மூன்றாவது மனைவி மெலனியா ட்ரம்புடன் வசிக்கிறார். ட்ரம்புக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், 10 பேரக்குழந்தைகள், 11வது பேரக்குழந்தை சில நாட்களில் பிறக்கப் போகிறது. இவர்களில் எத்தனை பேர் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் தங்குவார்கள் என்பது தெரியவில்லை. மனைவி மெலனியாவே இந்த முறை ட்ரம்பின் பிரசாரக் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கவில்லை. அதனால் அவர் வெள்ளை மாளிகைக்கு வர மாட்டார் என்று தகவல் பரவியது.
ஆனால், ‘‘எல்லாப் பொருட்களையும் பேக் செய்துவிட்டேன். வீடு எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டேன்’’ என்று அவர் சமீபத்தில் அறிவித்தார். கடந்த முறை ட்ரம்ப் ஆட்சியில் அதிகார மையமாக இருந்த மகள் இவான்கா இம்முறை சற்றுத் தள்ளியே இருக்கிறார். அதேநேரம் ட்ரம்ப் – மெலனியா தம்பதியின் 18 வயது மகன் பார்ரன் ட்ரம்ப் இம்முறை அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். இளைய தலைமுறையைக் கவரும் வகையில் ட்ரம்பின் பிரசாரத் திட்டங்களை வகுத்தவர் இவர். ட்ரம்ப் தனது மருமகள்கள், சம்பந்திகள் என்று உறவினர்கள் பலருக்கும் அரசாங்க பொறுப்புகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவர்களில் சிலர் வெள்ளை மாளிகைவாசிகளாகவோ, விருந்தினர்களாகவோ மாறக்கூடும்.
வெள்ளை மாளிகை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கும், அதிகாரிகளுடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ளவும், வெற்றி பெற்ற அதிபர் குடும்பத்தை பதவியேற்புக்கு முன்பாக அழைப்பது ஒரு மரபு. கடந்த முறை ட்ரம்ப் வென்றபோது, அப்போதைய அதிபர் ஒபாமா அவரை அழைத்து வெள்ளை மாளிகை நடைமுறைகளையும் அதிகார மாற்றத்தையும் சுலபமாக்கினார். ட்ரம்பின் மனைவி மெலனியாவை ஒபாமாவின் மனைவி மிச்செல்லி அழைத்துச் சென்று வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டினார். அதனால், எது எதை எங்கே வைக்க வேண்டும் என முடிவெடுப்பது மெலனியாவுக்கு சுலபமாக இருந்தது.
ஆனால், மரபை மதித்து ஜோ பைடன் குடும்பத்தை ட்ரம்ப் குடும்பம் அழைக்கவே இல்லை. என்றாலும், ஒபாமா ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை அமைப்பு நன்கு தெரியும் என்பதால், அவர்கள் தயாராகிவிட்டனர்.
இம்முறை ட்ரம்பை மரபுப்படி சம்பிரதாயமாக அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பைடன். அப்போதும் மெலனியா போக மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் நான்கு ஆண்டுகள் வசித்தவர் என்பதால் அவருக்கு எல்லாம் தெரியும் என்பதால், எதற்கு சும்மா போய் ஜில் பைடனை சந்திக்க வேண்டும் என்று தவிர்த்துவிட்டார்.
ஓர் அதிபர் வெளியேறும்போது, அவரின் தனிப்பட்ட குடும்பப் பொருட்களை மட்டுமே வெளியில் எடுத்துப்போக முடியும். அவர் காலத்தில் வெள்ளை மாளிகையில் வாங்கிய பொருட்கள் அனைத்தும் அங்கேயே இருக்கும். புதிய அதிபர் அவற்றில் தேவைப்படும் பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அறைகளையும் தங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம். வரவேற்பு அறையை படுக்கை அறையாகவும், படுக்கை அறையை வரவேற்பு அறையாகவும் மாற்றிய அதிபர்கள் உண்டு. சில அதிபர்கள் கட்டில் முதல் சோபா வரை எல்லாவற்றையும் தங்கள் வீட்டிலிருந்தே எடுத்து வருவதுண்டு.
வெள்ளை மாளிகை அலுவலகத்தில் இருக்கும் அரசு ஆவணங்கள், கொள்கைகள் தொடர்பான ரகசியக் குறிப்புகள், பேச்சுவார்த்தை விவரங்கள் உள்ளிட்டவை தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்படும். அவற்றை பதவி விலகும் அதிபர் எடுத்துச் செல்லக்கூடாது. நிக்ஸன் அதிபராக இருந்தபோது நடைபெற்ற வாட்டர்கேட் ஊழல் தொடர்பான ஆவணங்களை அவர் அழித்துவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகே இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
கடந்த முறை ட்ரம்ப் தோற்றபோது வெள்ளை மாளிகையை காலி செய்தார் அல்லவா? அப்போது ஆயிரக்கணக்கான ஆவணங்களை தன் ஃபுளோரிடா பீச் மாளிகைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அவற்றைத் திருப்பிக் கொடுக்கவும் மறுத்தார். கடைசியாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் சென்று அவற்றைப் பறிமுதல் செய்து எடுத்து வந்தார்கள். தன் வீட்டின் விருந்து அறையில், படுக்கை அறையில், பாத்ரூமில் என்று எல்லா இடங்களிலும் இந்த ஆவணங்களை அவர் போட்டு வைத்திருந்தார். அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியங்கள், நேச நாடுகள் மற்றும் எதிரி நாடுகளின் ராணுவங்கள் பற்றிய குறிப்புகள் என்று படு ரகசியமான பல ஆவணங்களை அவர் அள்ளிச் சென்றிருந்தார். இதற்காக அவர் மீது வழக்குகூட போட்டார்கள். அந்த வழக்கு சமீபத்தில் ட்ரம்ப் மீண்டும் வென்றதும் முடித்து வைக்கப்பட்டது.
ஜோ பைடனும் சாமானிய ஆசாமி கிடையாது. கடந்த முறை துணை அதிபராக இருந்தபோது ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அதைக் கண்டுபிடித்து அவற்றை மீட்டனர். அப்போது அதிபராக இருந்த ஜோ பைடனிடம் இதற்காக விசாரணைகூட நடைபெற்றது. ‘‘தவறுதலாக எடுத்துச் சென்றுவிட்டேன். இவை என்னிடம் இருந்தது ஞாபகம் இல்லை’’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். ஜோ பைடனின் ஞாபகமறதி உலகப் பிரசித்தி பெற்றது என்பதாலும், அவர் அதிபராக இருந்ததாலும், அந்த விவகாரத்தை அத்துடன் முடித்துவிட்டனர்.
இம்முறை அவர் எதையெல்லாம் ‘ஞாபகமறதியாக’ எடுத்துச் சென்றிருக்கிறார் என்று தெரியவில்லை.