`டிரம்ப் மீம் காயின்’ -கிரிப்டோ கரன்சி உலகிற்கு டிரம்பின் புதிய அறிமுகம்! | Trump Meme Coin

ஆரம்பத்தில் கிரிப்டோ கரன்சிக்கு எதிர்ப்பாளராக இருந்த டிரம்ப், இன்று தனது பெயர் மற்றும் உருவத்துடன் புதிய கிரிப்டோ மீம் காயினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுக்குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில், ‘என்னுடைய புதிய அதிகாரபூர்வ மீம் இதோ… என்னுடைய புதிய ஸ்பெஷலான டிரம்ப் கம்யூனிட்டியில் இணையுங்கள். உங்களுடைய டிரம்ப் கிரிப்டோ கரன்சியை இப்போது வாங்குங்கள்” என்று அவருடைய கிரிப்டோ மீம் காயினுக்கான லிங்கை பதிவிட்டுள்ளார்.

கிரிப்டோ கரன்சியின் ஆரம்பக்காலம் மற்றும் டிரம்பின் முதல் அதிபர் காலத்தில் கூட, டிரம்ப் கிரிப்டோ கரன்சி மற்றும் அதன் வளர்ச்சி மீது சந்தேகத்தில் இருந்தார். ஆனால், போக போக அதன் வளர்ச்சியைக் கண்ட டிரம்ப் தானே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபத்தை அடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் கூட, பிட் காயினுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அப்போது, ‘பிட் காயினை விற்காதீர்கள்’ அதன் மதிப்பு இன்னும் ஏறும் என்ற பொருளில் பேசினார்.

இன்னும் இரண்டு நாட்களில் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், அவர் அறிமுகப்படுத்தியுள்ள டிரம்ப் மீம் காயின் தாறுமாறாக விற்பனை ஆகும் என்றும், அதன் மதிப்பு அதிகளவில் எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.