கடந்த 2017 – 2020-ம் ஆண்டு வரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர், டொனால்டு ட்ரம்ப். இவர் நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து வரும் 20.1.2025 அன்று பதவியேற்கவுள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் அதை முழுமையாக கொண்டாட முடியாத நிலையில்தான் ட்ரம்ப் ஆதரவாளர்கள் இருந்தனர். இதற்கு ஆபாச பட நடிகை வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருந்ததுதான் காரணம்.

அதாவது கடந்த 2006-ம் ஆண்டு, அமெரிக்காவின் முக்கிய ரியல் எஸ்டேட் அதிபராக ட்ரம்ப் இருந்தார். அப்போது ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன் பல முறை ட்ரம்ப் பாலுறவு வைத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. பிறகு 2016-ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் தன்னுடன் உறவிலிருந்ததை மீடியாக்களில் சொல்லி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், டேனியல்ஸ்.
பிரச்னையை வளரவிட விரும்பாத ட்ரம்ப், டேனியல்ஸுக்கு 1.30 லட்சம் அமெரிக்க டாலர்களை கொடுத்து வாயை அடைத்திருக்கிறார். அந்த தொகை தேர்தல் பிரசாரத்துக்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து போலி வணிக பதிவுகளை உருவாக்கி சட்ட விரோதமாக கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 10-ம் தேதி, “ட்ரம்ப் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியதில்லை” என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மறுபக்கம் வரும் 20-ம் தேதி உற்ச்சாகமாக பதவியேற்கவிருக்கும் ட்ரம்ப், இந்தியா, சீனாவுடன் எப்படியான உறவை பேணுவார் என்பது குறித்த விவாதத்தினால் சர்வதேச அரசியல் களம் அனல் தகிக்கிறது!
இந்தியா – சீனா – ட்ரம்ப்
இதுகுறித்து நம்மிடம் பேசிய சர்வதேச அரசியல் நோக்கர்கள், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி இடையில் நீண்டகாலமாக நல்ல உறவு இருக்கிறது. பிரசாரத்தின் போது கூட மோடியை பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார், ட்ரம்ப். அதேநேரத்தில் வரி விதிப்பு, காற்று மாசுபாடு போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் அவர் இருக்கிறார்.
சமீபத்தில் பேசிய அவர், “இந்தியா துஷ்பிரயோகம் செய்யும் நாடு. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இந்தியாவில் கடுமையான வரி விதிக்கப்படுகிறது. நான் மீண்டும் வெற்றி பெற்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும்” எனக் கொதித்திருந்தார். இதேபோல் மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசிய ட்ரம்ப், “சீனாவில் வணிகம் செய்ய விரும்பினால், இங்கே பொருட்களைத் தயாரித்து அங்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
பிறகு அந்த பொருட்கள் மீது 250 சதவீதம் வரி விதிப்பார்கள். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இந்தியாவும் இப்படிதான் செய்தது. 200 சதவீதம் வரி விதிப்பால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை அங்கு விற்க முடியவில்லை” எனப் பேசியிருந்தார். இந்த சூழலில்தான் மீண்டும் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றிருக்கிறார். அவருக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததில், இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். ஆனாலும் வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து ட்ரம்ப் மாறவில்லை என்பதைத்தான் அவரது சமீபத்திய கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், “டாலரை விட்டு விலகும் முயற்சிகளை பிரிக்ஸ் நாடுகள் எடுத்து வருகின்றன. இதற்கு நாங்கள் மௌனம் காத்த காலம் எப்போதோ முடிந்துவிட்டது. பிரிக்ஸ் நாடுகள் சார்ப்பில் புதிய நாணயத்தை உருவாக்கதன் மூலம் சக்தி வாய்ந்த அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு நாணயத்தை முன்னிறுத்துவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அப்படி நடந்தால் சம்மந்தப்பட்ட நாடுகள் 100% வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும்.
ஒருவேளை அப்படி செய்தால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதேபோல்தான் சீனாவுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

முன்னதாக ட்ரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் சீனாவில் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கான கடுமையான வரிவிதித்தார். தெற்கு சீன கடல் பகுதிகளில் ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தினார். கூடவே கொரோனா வைரஸை, ‘சீனா வைரஸ்’ என அழைத்தார். இதனால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. பிறகு நடத்த தேர்தலில்தான் அதிபராக ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் சற்று குறைந்தது. இதற்கு சீனாவுடன் மோதல் போக்கை ட்ரம்ப் அளவுக்கு ஜோ பைடன் கடைபிடிக்கவில்லை. இதற்கிடையில்தான் ஜோ பைடன், ஜின்பிங் இடையிலான சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், “மீண்டும் பனிப்போர் ஏற்படக் கூடாது. அப்படி ஏற்பட்டால் அதில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது. சீனாவை கட்டுக்குள் வைக்க நினைப்பது ஏற்புடையதும் அல்ல’ என தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் உரசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது இந்தியாவுக்கு ஒருவிதத்தில் சாதகமான சூழலை உருவாக்கும்.
அதே நேரம் ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், சீனாவுடன் சுமூகமாக செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே என்ன நடக்கிறது என்பதை பொருத்தித்திருந்தான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்