கழுகார் : `சாட்டைப் புள்ளியின் 100 ஸ்வீட் பாக்ஸுகள் டு பலே ‘கணக்கு’ போட்ட கதைசொல்லியார்’

‘ஜில்’ மாவட்ட சூரியக் கட்சியில், மாவட்டப் புள்ளிக்கும், பதவியிறக்கம் செய்யப்பட்ட ‘வில்’ புள்ளிக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் ஊரறிந்த விஷயம். ஆனால், சமீபகாலமாக இருவரும் மோதல்களை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, நட்பு பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம். ‘என்னதான் பின்னணி?’ என்று விசாரித்தால், ‘2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, மாவட்டப் புள்ளியை பவரிலிருந்து இறக்கிவிட வேண்டும்’ என்று போர்க்கொடி உயர்த்திவருகிறார்கள் மாவட்ட சீனியர்கள் சிலர். இதனால் பயந்துபோன மாவட்டப் புள்ளி, தான் பவரில் இருக்கும்போதே தனது வாரிசை செட்டில் செய்துவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினார். ‘வில்’ புள்ளியும் அதே பாணியில் தனது வாரிசை முன்னிறுத்தும் வேலைகளைச் செய்துவருகிறார். இதையெல்லாம் கவனித்த முன்னாள் மா.செ ஒருவர், ‘பதவிக்கு வாரிசுதான் அடிப்படைத் தகுதி என்றால், என் மகனுக்கு மா.செ நாற்காலியைக் கொடுங்கள்’ என அண்மையில் நடைபெற்றச் செயற்குழுக் கூட்டத்தில் திரியைக் கொளுத்திப் போட்டுவிட்டார். இதையடுத்தே, ‘வெளிநபர் உள்ளே வந்தால், நம் இரண்டு பேருக்குமே ஆபத்தாகிவிடும்’ என்று உணர்ந்து, இவ்வளவு நாள் அடித்துக்கொண்ட இருவரும் புரிந்துணர்வோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறார்களாம்!

‘கொங்கு அரசியல் என்றாலே, அதில் தன் பெயர் மட்டுமே இருக்க வேண்டும்’ என்று பேராசைப்படுகிறார் மாண்புமிகு சிறைப்பறவை. ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் இரண்டு மாவட்டங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், தனது எல்லையை இன்னும் விரிவுபடுத்தவும் முயன்றுவருகிறார். அண்மையில், இடைத்தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டிக்கொண்ட துணைப் புள்ளிக்கு, வம்படியாகப் போய் ஆறுதல் கூறினாராம் சிறைப்பறவை. ‘முத்தானவர் நினைத்திருந்தால், உமக்கு சீட் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். அவர் அதிகாரத்தில் இருக்கும்வரை, உமக்கு வாழ்வே கிடையாது’ என்று அவர் கூறிய ‘ஆறுதல்’, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக இருந்திருக்கிறது. ஏற்கெனவே முத்தானவரை முறைத்துவந்த துணைப் புள்ளியின் கோபத்தை, பக்குவமாகத் தூண்டிவிட்ட திருப்தியில் சிறைப்பறவை புன்னகைக்க… இதையெல்லாம் கேள்விப்பட்ட முத்தானவர், சிறைப்பறவையின் றெக்கைகளை முறிக்க இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறாராம். ஒன்று, அவரது எல்லை தாண்டும் பயங்கரவாதம் குறித்து தலைமையிடம் புகார் கொடுப்பது. மற்றொன்று, மதிமயக்கும் துறையின் அதிர்ச்சிக்குரிய சில ரகசியங்களை வெளியிடுவது.

இது எப்படி இருக்கு?

காக்கித்துறையில் ரௌடிகளைக் கண்காணிக்கும் பிரிவினருக்கும், சட்டத்தை நிலைநாட்டும் பிரிவினருக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். கண்காணிப்புப் பிரிவினர், நிலைநாட்டும் பிரிவினரிடமிருந்தே தகவல்களை பெற்று, அவர்களுக்கு எதிராக மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பிவருவதே இந்தத் தொடர் பூசலுக்குக் காரணமாம். சமீபத்தில், கண்காணிப்புப் பிரிவில் இருந்த, ‘தமிழ்க் கடவுள்’ பெயர்கொண்ட காக்கி அதிகாரி மாற்றப்பட்டார். அதிலிருந்து, பூசல் இன்னும் அதிகமாகியிருக்கிறதாம். அவர் இடத்துக்குப் புதிதாக வந்த வடநாட்டு அதிகாரி, தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக, ரௌடிகள் குறித்து மேலிடத்துக்கு ரிப்போர்ட்டுக்கு மேல் ரிப்போர்ட் அனுப்பிக்கொண்டேயிருக்கிறாராம். இதனால், நிலைநாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம், ‘இவ்வளவு ரௌடிகளை வைத்துக்கொண்டு… என்னத்தை நிலைநாட்டப் போகிறீர்கள்?’ என்று மேலிடத்திலிருந்து தினமும் `டோஸ்’ விழுகிறதாம். இதனால் டென்ஷனிலிருக்கும் நிலைநாட்டும் அதிகாரிகள், ‘கண்காணிப்புப் பிரிவினருக்கு இனி எந்தத் தகவலும் கொடுக்கக் கூடாது’ என்று உத்தரவே போட்டுவிட்டார்களாம். இவர்களுக்குள் எரியும் இந்த கோஷ்டிப்பூசலை எப்படிச் சரிசெய்வது என்று புரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்களாம் ஆட்சி மேலிடத்தார்!

‘மலர்க் கட்சியின் மாநிலத் தலைமையில் மாற்றம் இல்லை’ என்கிற செய்தி அப்படியும் இப்படியுமாகக் கசியவிடப்பட்டாலும், எதிர்த் தரப்பிலுள்ள சீனியர்கள் விடாமல் போராடிவருகிறார்கள். மாவட்டத் தலைவர்களை நியமிக்கவிடாமல், தங்களின் ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியும் வைத்துவிட்டார்கள். அவர்களின் வேகத்தைப் பார்த்து ‘ஒருவேளை நம்ம இடத்துக்கு வேட்டு வைத்துவிடுவார்களோ?’ என்று உள்ளூர ரொம்பவே பயப்படுகிறாராம் சாட்டைப் புள்ளி. இந்த நிலையில், தலைவரைத் தேர்வுசெய்யும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய மாண்புமிகு ஒருவர், சென்னைக்கு வரவிருக்கிறார். இவர் கொடுக்கும் ரிப்போர்ட்டை வைத்தே, தலைவர் யார் என்பதை டெல்லி முடிவுசெய்யுமாம். இதனால், மத்திய மாண்புமிகுவை எல்லா வகையிலும் குஷிப்படுத்த தயார்நிலையில் இருக்கிறாராம் சாட்டைப் புள்ளி.

இதற்காக, உட்கட்சித் தேர்தல் தொடங்கி இன்று வரை ‘சுமார் 100 ஸ்வீட் பாக்ஸுகள் வரை திறந்திருக்கிறாராம். ‘சாதாரண ஆளுக்கு இவ்வளவு ஸ்வீட் பாக்ஸுகள் எப்படிக் கிடைத்தன?’ என்று பட்டிமன்றமே நடக்கிறதாம் மலர் அலுவலகத்தில். தேர்தல் தொடங்கி முடியும் வரை அவரின் நடவடிக்கைகளையெல்லாம் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து, டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்ப ஆயத்தமாகிவருகிறார்கள் எதிர்த் தரப்பு சீனியர்கள்!

2023-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, கட்சி சார்பாகக் களமிறங்கிய வேட்பாளரிடம், ‘2026 தேர்தலிலும் உனக்குத்தான் தங்கச்சி சீட்…’ என்று உறுதிமொழி கொடுத்திருந்தாராம் கதைசொல்லியார். இந்த நிலையில், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத தங்கச்சி ஒருவரைக் களமிறக்கியிருக்கிறார் கதைசொல்லியார். இது குறித்து விசாரித்தால், ‘ஆளுங்கட்சி, முதலியார் வேட்பாளரை நிறுத்தியிருக்கும் நிலையில், நாமும் அதே சமூக வேட்பாளரை நிறுத்துவது சரி வராது. எனவே, தொகுதியின் இரண்டாவது பெரும் சமூகமான கவுண்டர் சமூகத்திலிருந்து வேட்பாளரை நிறுத்தினால், இலைக் கட்சியின் வாக்குகளை அள்ளிவிடலாம் என கணக்கு போட்டு அறிவித்திருக்கிறார் தலைவர்’ என விளக்குகிறார்கள் தம்பிகள் சிலர்.

ஆனால், கட்சியிலுள்ள விவரத் தம்பிகள் சிலரோ, “ ‘சாதி பார்த்துப் போடும் ஒவ்வொரு ஓட்டும் தீட்டு…’ என வீராவேசம் பேசுகிற அண்ணன், இப்படி சாதிக் கணக்கு போடலாமா… சரி… அரசியலில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால், இலைக் கட்சியின் வாக்குகள்தான் குறி என்றால், அதே தொகுதியைச் சேர்ந்த தங்கச்சியை நிறுத்தியிருக்கலாமே… ஆக, எதிர்த் தரப்பு வேட்பாளரிடம் அண்ணன் இனிப்பு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார். அதைச் சமாளிக்கத்தான் இப்படியெல்லாம் கதைவிடுகிறார்” என்று விவரமாகச் சந்தேகப்படுகிறார்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs