கலிபோர்னியா காட்டுத் தீ
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் கலிபோர்னியா மாகாணம் தனித்துவமானது. இந்த மாகாணத்தின் ஒரு ஆண்டின் Gross State Product (GSP) $4.1 டிரில்லியன் டாலர் ஆகும். மொத்த இந்தியாவின் ஒரு ஆண்டு மொத்த GSP $4.27 டிரில்லியன் டாலர்தான்.
கலிபோர்னியா பசிபிக் கரை ஓரத்தில் வடக்கிலிருந்து தெற்காக நீள்வாக்கில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் கடற்கரை ஓரத்தில்தான் அனைத்து புகழ் பெற்ற நகரங்களும் உள்ளன. இந்த மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளதுதான் லாஸ் ஏஞ்சல்ஸ்.
தெற்கே மெக்சிகோ எல்லை உள்ளது. இங்குதான் சாண்டியாகோ உள்ளது. இங்கு உலகப் புகழ் பெற்ற கடல் உலகம் (Sea World) உள்ளது.
நாம் குரங்கு மற்றும் கிளிகளைப் பழக்கி வித்தை காட்டுவது போல் கடல் உலகத்தில் திமிங்கிலம் மற்றும் டால்பின்களைப் பழக்கி வித்தை காட்டுகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் – ஹாலிவுட் நகரம்
இந்த நகரத்திலிருந்து சுமார் 120 மையில் தூரத்தில்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இங்குதான் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் உள்ளது. இது ஒரு மலைமேல் உள்ளது. அருகில் ஒரு மலையில் உயர் தர அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு பழங்காலப் பொருளைக் கொண்டு போய்க் கொடுத்தால் போதும். அவர்கள் அந்தப் பொருளின் காலத்தைக் கண்டறிந்து தருவார்கள். நீங்கள் அதனை விற்க விரும்பினால் ஏலத்திற்கு ஏற்பாடு செய்து விற்றும் தருவார்கள்.
இங்கிருந்து 381 மையில் தொலைவில் சான்பிரான்ஸ்சிஸ்கோ அமைந்துள்ளது. இந்த மூன்று நகரங்களும் மிகப் பெரியவை. தெற்கு கலிபோர்னியா பகுதி என்பது லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் சான் டியாகோ வரையிலானப் பகுதியாகும். எனக்கும் இந்தப் பகுதியில் ஆறு ஆண்டுகள் வாழ வாய்ப்புக் கிடைத்தது.
உலகின் எந்தப் பகுதியில் பிறந்தாலும், அதிகப் பணம் சம்பாதித்தவர்கள் தெற்கு கலிபோர்னியா பகுதியில் வீடு வாங்கி வாழ்வது மிகச் சாதாரணமாக நிகழக்கூடியது.
இதற்குக் காரணம் பல. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
ஆரஞ்ச் கவுண்டி
இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நம் கோயம்புத்தூரை ஒத்த வெப்ப நிலைதான் ஆண்டு முழுக்க இருக்கும். இங்குள்ள கடற்கரை மிகவும் அழகாக இருக்கும். உங்கள் மனோநிலை எப்படியோ அப்படி வாழ இங்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக இங்குள்ள கடற்கரை புகழ் பெற்றது. பொழுது போக்கு அம்சங்கள் இங்கு அம்சமாக நிறைந்து காணப்படுகிறன.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள இர்வைன் என்ற ஊருக்கு அருகே சூரியன் 11 மணி அளவில்தான் தலையைக் காட்டும். பெரும்பாலான நேரங்களில் சூரியன் அடர்ந்த மேகங்களால் மறைக்கப்பட்டு இருக்கும். இந்தப் பகுதியை ஆரஞ்ச் கவுண்டியென அழைக்கிறனர். கவுண்டி என்பது நம் ஊர் வட்டத்திற்குச் சமம். டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற ஸ்டெப்பி இங்குதான் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ஜெர்மானியர் என்பதனை நினைவில் கொள்க. இந்த ஆரஞ்சு கவுண்டிதான் உலகில் அதிக வருமானம் உள்ளவர்கள் வாழும் இடம். இங்கு நான் இங்கு ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தேன்.

அமெரிக்க வர்த்தகத்தின் சொர்க்க பூமி…
உலக அளவிலான வர்த்தகத்திற்கும் அமெரிக்க வர்த்தகத்திற்கும் கலிபோர்னியா ஒரு சொர்க்க பூமி.
திரைத்துறையிலிருந்து கணினி மற்றும் கணினி மென்பொருள் தொழில்நுட்பத்திற்கு கலிபோர்னியா தலை சிறந்தது.
கலிபோர்னியா மாகாண பல்கலைக் கழகங்கள் மொத்தம் 23. அவைகளில் சன்பிரான்ஸ்சிஸ்கோ பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் இர்வான் பல்கலைக் கழகம் உலக பல்கலைக் கழகங்களில் முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. எனவே உயர் கல்விக்கு மட்டும் அல்ல ஆராய்ச்சிக்கும் கலிபோர்னியா சிறந்த இடம்.

ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் காட்டுத்தீ
கலிபோர்னியாவில் ஆண்டுக்கு ஒரு முறை காட்டுத்தீ ஏற்படும். காரணம் இந்த பகுதி நிறைய மலைக் குன்றுகளைக் கொண்டது. இதனில் வளரும் தாவரங்கள் கோடைக் காலத்தில் கருகி சருகாகக் காட்சி தரும். சிகரெட் மற்றும் பல காரணங்களால் இங்குத் தீ விபத்து ஆண்டுதோறும் வரும்.
இந்த விபத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு தீயணைக்கும் படைக்கான ஆண்டு பண ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது.
இங்கு உள்ள ஏரிகளில் தண்ணீரைச் சேமிக்கவும் அரசு தவறிவிட்டது.
இதனை அறிந்த காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் பகுதியில் தீ விபத்துக்கான காப்பீட்டை எல்லாம் ரத்து செய்தது.
`பகல் – இரவு எது என்றே தெரியவில்லை’
இந்த நிலையில், இங்கு இரண்டு தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மூன்று இடங்களில் தீ விபத்து ஏற்பட்டன.
அது எப்படி ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது, என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.
இந்தத் தீ ஏற்பட்ட உடன் அதிக சக்திவாய்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதன் விளைவாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்பற்றி எரிந்து வருகிறது.
உலகப் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஹத்தி அருங்காட்சியகம் தீ தாக்காத வண்ணம் கட்டப் பட்டுள்ளது. அதனால் இது தப்பியது.

நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி உள்ள பகுதியைத் திருநெல்வேலி நகரம் என்று நாம் அழைக்கிறோம். இது மாதிரி லாஸ் ஏஞ்சல்ஸ் பலசைடு (Palisade) நகரம் ஒன்று உள்ளது. அதனை பலசைடு டவுன் டவுன் (Down-town) என அழைக்கிறனர். இங்கு வானளாவிய கட்டடங்கள் நிறைய உள்ளன. இவற்றில் ஒன்று கூட இன்று இல்லை. அத்தனையும் எரிந்து கரிக்கட்டையாக நிற்கின்றது.
லாஸ் ஏஞ்சல் பகுதியில் வாழும் நண்பரும் பேராசிரியருமான வைத்தி ஆறுமுகசாமி தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தேன். அவர் கூறுகையில்,
“பகல் பொழுது இங்கே இரவுபோல் காட்சியளிக்கிறது. அத்துடன் பகல் – இரவு எது என்றே தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது. காரணம் தீ எரிந்ததால் ஏற்படும் கரும்புகை சூரிய ஒளியைத் தடுத்து நிறுத்திவிடுகிறது.

மலையின் மேல் ஹாலிவுட் எனப் பெரிய எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தப் பகுதியில்தான் ஹாலிவுட் பிரபலங்கள் பல லட்சம் டாலரில் கட்டிய சொகுசு பங்களாக்கள் உள்ளன. அவை இப்போது அனைத்தும் சாம்பலாகி விட்டது.
இதுவரை, உலகம் காணாத காட்சிகள் எல்லாம் அங்குப் பார்க்க முடிகின்றன. உதாரணமாக வானில் ஒன்று சேர்ந்த கரும்புகை திடீர் எனப் பற்றி எரிந்து கீழே விழுகின்றன. இதனைப் பார்க்க மேகங்கள்பற்றி எரிந்து கீழ் விழுவது போல் உள்ளன.

இந்தப் பகுதியில் நிறைய ஈச்ச மரங்களும் பனை மரங்களும் உள்ளன. இந்த உயிர் உள்ள பச்சை மரங்களின் கொண்டைப் பகுதி மட்டும் தீ எரிவது பார்க்க நம்ப முடியாத காட்சியாக உள்ளது. எரிந்து நிலையில் அவை காற்றில் அங்கும் இங்கும் ஆடுவது பயங்கரமான காட்சியாக உள்ளது.
பைன் மரங்களும் யூக்கலிப்டஸ் மரங்களும் எண்ணெய் சத்து நிறைந்தவை. இவை 100 அடிக்கும் மேல் வளரக் கூடியவை. இவைகள் நின்று எரிந்து கொண்டுள்ளதைப் பார்க்கக் குலைநடுங்குகிறது.” என்றார்.
மக்கள் உயிருக்குப் பயந்து வாகனங்களை மற்றும் உடைமைகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு சென்றவாறு உள்ளனர். இதனால் கார்கள் எரிந்து உருகி ஓடும் காட்சியைப் பார்க்க முடிகிறது. நான் இதுவரை இப்படி ஒரு காட்சியைப் பார்த்ததில்லை. இந்தத் தீ விபத்தைப் பல குறும்படங்கள் தத்ரூபமாக விளக்குகின்றன.
ஒரே இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானக் கார்கள் ஒவ்வொன்றாக எரியும் காட்சி கோரத்தாண்டவம்தான். ஒவ்வொரு காரில் நிரப்பிவைத்துள்ள பெட்ரோலும் காற்று நிரம்பியுள்ள டயர்களும சத்தத்துடன் வெடிப்பதையும்; காரில் உள்ள இருக்கைகள் மற்றும் டயர்கள் எரிவதால் வெளிவரும் கரிய புகை மண்டலமும் மனதைக் கலங்கடிக்கும் காட்சி.

தெருவில் நிற்கும் கார்களை எந்திரங்கள் கொண்டு குப்பையை அகற்றுவது போல் அகற்றி வருகின்றனர்
சில இடங்களில் சரவெடி போல் வீடுகள் வெடித்து சிதறுதைப் பார்க்க முடிகிறன. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் தனியார்களும் பூமிக்குக் கீழே இருக்கும் கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம்.
இந்தத் தொடர் வெடி போன்ற சம்பவத்திற்கு இந்தக் கச்சா எண்ணெய் கிணறுகளும் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் வீட்டிற்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களும்தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
பொருள் சேதம் அதிகம்;ஆனால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
மனிதர்கள்மேல் மட்டும்தான் நம் பார்வை உள்ளன. காட்டு விலங்குகளின் நிலையை உணர்த்தும் குறும்படங்கள் நெஞ்சைக் கலங்கடிக்கத்தான் செய்கின்றன. கலிபோர்னியாவின் வனப் பகுதியில் நிறையக் கரடிகள், மான்கள், நரிகள் உண்டு. இவைகளும் பிற விலங்குகளும் பறவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தில் இதுவரை தோராயமாக 75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். அதாவது இந்தத் தொகையை இந்த மாநிலம் ஈட்ட சுமார் 21 ஆண்டுகள் எடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால், உயிரிழப்புக்கள் பெரிதும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளன. இவ்வளவு பெரிய தீ விபத்தில் இதுவரை இறந்தவர்கள் 12 பேர்.

12 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். அடுத்து சில மணி நேரங்களில் 2 லட்ச மக்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் படுவார்கள். இதனைப் பார்க்க ஒரு போர்க்களத்தை விடப் படு பயங்கரமாக உள்ளது.
கலிபோர்னியாவில் நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகம். அதனால் இங்கு வீடுகள் பெரும்பாலும் மரங்களினாலேயே கட்டப்படுகின்றன. இந்தத் தீ வேகமாகப் பரவ மரவீடுகள் நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுக்கின்றது. மேலும், இங்கு உள்ள சாலைகள் பெரும்பாலும் சிமெண்டால் கட்டப்பட்டவை. தார்ச் சாலைகள் இங்கு அதிகம் இல்லை. அதனால் பெரிய சாலைகள் தப்பின. போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படவில்லை.
மக்கள் தங்கள் வீட்டின் மேல் தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றனர். எங்கிருந்தோ பறந்து வரும் தீக் கங்கால் வீட்டில் நெருப்பு பற்ற வாய்ப்புள்ளது. எனவே தண்ணீரில் தங்கள் வீடுகளை மக்கள் நனைத்தும் வருகின்றனர்.

தீ பரவ காரணம் என்ன?
பரந்து வரும் தீக்கங்குகள் சுமார் 7.5 கிலோமீட்டர் தூரம் வரைப் பயணித்து தீயை வேறு இடத்தில் பற்றவைக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.
சில மக்கள் இந்தத் தீவிபத்து இயற்கையானது இல்லையென கூறுகின்றனர்.
சக்திவாய்ந்த லேசர் கதிர்களால் இந்தத் தீவிபத்து ஏற்படுத்தப் பட்டுள்ளன எனச் சிலர் சந்தேகத்துடன் கூறுகின்றனர்.
சில விசமிகள் தீயைப் பற்றவைத்துக் கொண்டுள்ளனர் எனவும் சிலர் கூறுகின்றனர்.
சிலர் இதனைப் பயன்படுத்தி வீடுகளிலும் கடைகளிலும் கொள்ளை அடித்தும் வருகின்றனர். இப்படிப் பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பலர் கைதாகியும் உள்ளனர்.
உலகின் பிற பகுதிகளில் அமெரிக்க இராணுவம் மற்றும் ஆயுதங்கள் வைத்து அழித்த இடங்களையும் இன்று எரிந்து கொண்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் இணைத்தும் இணையதளத்தில் பேசியும் வருகின்றனர்.