ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ – பரபர பின்னணி

தமிழகத்தில் கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். இவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி காலமானார். பிறகு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரும் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 14.12.2024 அன்று மறைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தொகுதிக்கான தேர்தல் தேதி குறித்து அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், “ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கும்” என தெரிவிக்கப்பட்டது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – ஈரோடு கிழக்கு

அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்குவதற்கு அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். சமீபத்தில் ஈரோட்டில் நடத்த மாநகர காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் ஒரே குடும்பத்துக்கு மீண்டும் மீண்டும் சீட் கொடுக்க கூடாது என எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதற்கு அடுத்து ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் சீட் கேட்டிருக்கிறார்.

இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர். எனவே அவர் மூலமாக வாய்ப்பு கேட்டிருக்கிறார். அடுத்ததாக இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில் அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் போட்டியிட சத்தியமூர்த்தி பவன் கதவை தட்டிருக்கிறார். மேலும் இந்த ரேஸில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ரூட்டில் அவரது ஆதரவாளரும் கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஆர்.எம்.பழனிச்சாமி விரும்பம் தெரிவித்திருக்கிறார். மறுபக்கம் தி.மு.க தரப்பில் இருந்து கொள்கை பரப்பு துணைத் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முயன்று வருகிறார்கள்.

சத்தியமூர்த்தி பவன்!

இந்த சூழலில்தான் சமீபத்தில் கமலாலயத்தில் நடந்த மையக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “கடந்த 8.1.2025 அன்று கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பொதுச் செயலாளர் தருண சுக், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் மாவட்ட தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் அண்ணாமலையின் ஆதரவாளர்களே அதிகம் வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட தலைவர்கள் அடங்கிய பட்டியல் விரைவில் டெல்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அண்ணாமலை!

இதற்கிடையில்தான் கூட்டத்தில் பங்கேற்ற சீனியர் தலைவர்கள், ‘ஈரோடு கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதிலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. பா.ஜ.க சார்பில் வேட்பாளரைக் களமிறக்க வேண்டும்” என பேசினர். இதற்குப் பதிலளித்த அண்ணாமலை தரப்பு, “நமது இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல்தான். இடைத்தேர்தல் குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கலாம்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

அதாவது பா.ஜ.க-வில் மாநில தலைவர் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இந்த சூழலில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிறது. இதில் பா.ஜ.க சார்பில் வேட்பாளரைக் களமிறக்கினால் மிகக் குறைவான வாக்குகள்தான் கிடைக்கும் என மூத்த தலைவர்களுக்குத் தெரியும். ஆனாலும் போட்டியிட வேண்டும் எனச் சொல்கிறார்கள். அப்போதுதான் தேர்தல் முடிவில் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்தால் மாநில தலைவர் பதவியை தக்கவைப்பதில்அண்ணாமலைக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என நினைக்கலாம்.

பாஜக மையக்குழு கூட்டம்

இதனால்தான், ‘தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என எதிர் கோஷ்டிகள் வலியுறுத்துகின்றன. தனக்கு எதிராக காய் நகர்த்துவது அண்ணாமலை தரப்புக்கும் தெரியும். எனவேதான், ‘மேலிடம் பார்த்துக்கொள்ளும்’ எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இனி டெல்லி என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்து தான். ” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs