பெண்களுக்கு எதிரான குற்றம்: “ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை” – சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் பெண்களுக்கு எதிரானக் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2025 குற்றவியல் திருத்தச் சட்ட முன்முடிவை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது இந்த திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.

ஸ்டாலின்

இத்தகையக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட நினைப்பவருக்கு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில், பி.என்.எஸ் சட்டத்தின் கீழும், நம் மாநில அரசின் சட்டத்தின் கீழும் ஏற்கெனவே இத்தகையக் குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.” என்றார்.

அதைத் தொடர்ந்து பி.என்.எஸ் – மாநில சட்டத் திருத்தங்கள் அடிப்படையில் தமிழ்நாடு 1998 பெண்ணுக்கு துன்பம் விளைவித்தல் தடை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

என்ன சொல்கிறது மசோதா:

2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், தமிழ்நாடு திருத்தச் சட்டம் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனையும் வழங்கப்படும்.

சிறை

* பெண்ணை பின்தொடர்ந்தால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 5 ஆண்டு சிறை.

* குறிப்பிட்ட சில இடங்களில் குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை.

* மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை.

* ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களில் ஈடுபடால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.