“எதிரிகளை வீழ்த்தும்’ ஐதீகம் கொண்ட கும்பகோணம் கோயில்’ – கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் விசிட்

கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார், மனைவி உஷாவுடன் பெங்களூரிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லுாரியில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கினார். அவருக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கும்பகோணம் மேயர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

கும்பகோணம், பிரித்தியங்கிராதேவி கோயிலில் சிவக்குமார்

இதையடுத்து, கும்பகோணம், திருநாகேஸ்வரம் அருகே உள்ள அய்யாவாடியில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி கோயிலுக்கு தனது மனைவியுடன் சிவக்குமார் சென்றார். கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்ட சிவக்குமார் மனைவியுடன் சேர்ந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் குருக்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி பிரசாத்தை கொடுத்தனர். இதையடுத்து அங்கிருந்து காரில் கிளம்பியவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் புறபட்டு சென்றார்.

முன்னதாக சிவக்குமார் செய்தியாளர்களிடம், “பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், அவர்கள் பிரச்னைகளை உருவாக்க நினைக்கிறார்கள். மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் மத்திய அரசு, முறையாக நிதி வழங்காமல் அநீதி இழைத்து வருகிறது. மாநிலங்கள் வழங்கும் வரியில் இருந்து முறையான பயன்கள் திரும்ப கிடைப்பதில்லை என்பதால் ஒன்றுபட்டு போராடுகிறோம்” என்றார்.

கும்பகோணம்

பிரித்தியங்கிராதேவி கோயிலில் வழிப்பட்டால் எதிரிகள் வீழ்வார்கள், இழந்தவை திரும்ப கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். அமாவாசை தினத்தில் இங்கு நடக்கும் நிகும்பலா யாகம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகள் அழிவார்கள் என்பது இக்கோயிலின் சிறப்பாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் இக்கோயிலில் வழிப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தாங்கள் நினைத்தது நடப்பதற்காக சத்தமில்லாமல் இங்கு வந்து செல்கின்றனர். அதே போல் தமிழக அரசியலில் உள்ள முக்கியமானவர்களும் வந்து வழிபாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.