China: ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள நபர்; தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் விநோதம்!

சீனாவைச் சேர்ந்த லியு என்ற 59 வயது பெண்மணிக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பது, நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

அவரது அதிகாரபூர்வ ஆவணங்கள் அவரைப் பெண் என்கின்றன. அவருக்கு இரண்டு திருமணங்களில் இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர்.

அவரது முதல் திருமணம் ஓர் ஆணுடனும், இரண்டாவது திருமணம் ஒரு பெண்ணுடனும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அவரது ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் மற்றொரு குழந்தைக்குத் தாயாகவும் இருந்துள்ளார்.

ஒரே வாழ்க்கையில் தந்தையாகவும், தாயாகவும் இருக்கும் அனுபவத்தைப் பெறுவது மிக மிக அரிதானது.

18 வயதில் ஆணுடன் திருமணம்!

தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த லியு பெண்ணாகவே அறியப்பட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே வித்தியாசமான விருப்பங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்துள்ளார். மற்ற பெண்களிடம் இருந்து தனித்து முடியை ஆண்களைப் போல கத்தரித்துக்கொண்டுள்ளார், ஆண்களின் ஆடையை அணிந்து வந்துள்ளார்.

தனது 18 வயதில் லியு டாங் என்ற ஆணைத் திருமணம் செய்துள்ளார். அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அதன்பிறகு லியுவின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்…

திடீரென ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் எழுச்சியால் மீசை மற்றும் தாடி வளரத் தொடங்கியுள்ளது. மார்பின் அளவு சிறுத்துள்ளது. ஆண் இனப்பெருக்க உறுப்புகள் வளரத் தொடங்கியுள்ளன.

இந்த மாற்றங்களால் லியுவின் கணவர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்த மாற்றத்துக்குப் பிறகு லியு தனது மகனை டாங்கிடம் விட்டுவிட்டு, மற்றொரு கிராமத்துக்குச் சென்று ஒரு ஷு தொழிற்சாலையில் பணியாற்றியபடி, ஆணாக வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

பெண்ணுடன் காதல்

அங்கே ஜௌ (Zhou) என்ற உடன் பணியாற்றும் பெண் இவரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் தனது உடல்நிலையால் அவரது காதலுக்கு பதிலளிக்கத் தயங்கியிருக்கிறார் லியு. காலப்போக்கில் லியுவும் அவரை காதலித்துள்ளார்.

லியுவின் உடல் நிலை சிக்கல்களையும் கடந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் ஜௌ. ஆனால் லியுவின் ஐடி கார்டில் பெண் எனக் குறிப்பிட்டப்பட்டிருப்பதனால் அவர்களது திருமணம் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. ஓர் பாலின திருமணங்கள் சீனாவில் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விநோத ஒப்பந்தம்!

அந்த நேரத்தில் தனது முன்னாள் கணவரின் உதவியை நாடியுள்ளார் லியு. டாங், ஜௌவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகு தான் ஜௌ உடன் வாழ்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு மாற்றாக மகனின் செலவுக்காக லியு கொடுக்கும் தொகையை அதிகரிப்பதாகக் கூறியுள்ளார். இந்த விநோதமான ஒப்பந்தத்துக்கு டாங் ஒப்புக்கொண்டுள்ளார்.

டாங் மற்றும் ஜௌ திருமணம் செய்துகொண்டனர். லியுவும் ஜௌவும் ஒன்றாக வாழ்ந்தனர். சில ஆண்டுகள் கழித்து ஜௌ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

லியுவின் திருமண ஒப்பந்தங்கள் அவரை அதிவிநோதமான சூழலில் தள்ளியது. அவரது மகன்களில் ஒருவர் அவரை அம்மா என்றும், மற்றொருவர் அப்பா என்றும் அழைத்தனர்.

2005ம் ஆண்டு லியுவின் கதை ஒரு உள்ளூர் செய்தித்தாளில் வெளியானது. மொத்த சீனாவும் லியுவின் கதையைக் கேட்டு வியந்தது. அப்போது பல மருத்துவ நிபுணர்கள் லியுவின் உடலை இலவசமாக பரிசோதிக்க முன்வந்தனர். ஆனால் லியு அதற்கு மறுத்துவிட்டார். இன்றளவும் மறுத்து வருகிறார்.

தற்போது ஓர் ஆணாக பார்க்கப்பட்டாலும் லியு, செலவீனம் காரணமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை. இதனால் அவர் அடையாள அட்டைகளில் பெண்ணாகவே தொடர்கிறார்.