தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, கோப்பயன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பங்கள் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 14 கூட்டுறவு சங்கங்கள் அமைத்து தொழில் நடந்து வந்த பகுதியில் தற்போது 4 சங்கங்கள் மட்டுமே இயங்கி வருகிறது.
ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் போது கூலி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூலி ஒப்பந்தம் முடிந்த பிறகும் புதிய கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வரவில்லை.
இதனால் விசைத்தறி நெசவாளர்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். இதனால் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நெசவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எவ்வித முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் ஐனவரி 21 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதற்கிடையே விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.