முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் எனத் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி முன்பு பேசினார். கடந்த நான்கு ஆண்டுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என நினைக்கிறோம்.
மதுரை மாவட்டத்தில் 318 கடைகள் உள்ளன. இவற்றைப் பாதியாகக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அடைக்க வேண்டும். மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு, பூரண மதுவிலக்குக் கொண்டு வந்தால் வரவேற்போம்.
அரசு அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள், கூட்டுறவு மருந்துக் கடைகள் என அனைத்திலும் முதலமைச்சர் படம் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக்கடைகளில் மட்டும் ஏன் முதல்வர் படம் வைக்கக் கூடாது? அதன் காரணமாகத்தான் தற்போது மதுரை கலெக்டரை சந்தித்து முதல்வர் படத்துடன் மனு அளிக்க வந்தோம்” என்றார்.
எப்போதும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருகின்றவர்களிடம் விசாரித்து அனுப்பும் காவல்துறையினர் முதலமைச்சர் படத்துடன் வந்தவர்களை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.