Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு – பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச்சி குறித்து உரையாடியிருக்கின்றனர்.

ஆப்கான் மக்களுக்கு இந்தியா அளித்துவரும் மனிதாபிமான மற்றும் வளர்ச்சி நிதி உதவிகளுக்காக நன்றி தெரிவித்த மவ்லானி அமிர் கான் முத்தாகி, இந்தியா உதவிகளைத் தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அளித்த அறிக்கையின்படி, “வளர்ச்சி நடவடிக்கைகளின் தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய மனிதாபிமான உதவிகளுடன், விரைவில் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா இணைவது குறித்து முடிவெடுக்கப்படும்.” எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பில் கிரிக்கெட் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் உரையாடப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானின் இளம் தலைமுறையினரால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வணிக மற்றும் வாணிப நடவடிக்கைகளுக்கு சபஹர் துறைமுகத்தைப் பயன்படுத்துவதையும், ஆப்கான் மக்களுக்கான மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அந்த வழியாக அனுப்புவதையும் இரு தரப்பும் ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Indian Foreign Secretary meets Taliban Minister

ஆப்கான் தரப்பு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வண்ணம், இந்தியா இன்னும் பொருளுதவிகளை அனுப்பிவைக்கும். அகதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில் மருத்துவ பொருட்களை அனுப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.” என்று வெளியுறவுத்துறைக் கூறியுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு, கோதுமை, மருந்து பொருட்கள், நிலநடுக்க நிவாரண உதவிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், போலியோ மற்றும் கோவிட் 19 மருந்துகள், துப்புறவு பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் குளிர்கால உடைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை ஆப்கானிஸ்தான் உணர்ந்திருப்பதாக கூறியுள்ளார் ஆப்கான் அமைச்சர். இருதரப்பும் தொடர்பில் இருந்து வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர்.