`பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!’ – சீமான் காட்டம்

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா? மதுவுக்கு எதிராக தன் தோப்பிலிருந்த 1,000 தென்னை மரங்களை வெட்டினார். பகுத்தறிவுவாதிதானே அவர்?

சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

என் தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை எனச் சொல்லியிருக்கலாமே?! அதற்காக யாராவது மரத்தை வெட்டுவார்களா? அதுதான் பகுத்தறிவா?” என்று பேசியிருந்தார். அந்தப் பேச்சுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில் இன்று புதுச்சேரிக்கு வந்த சீமானிடம்,  `பெரியார் குறித்து நீங்கள் பேசிய பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஆதாரம் கேட்டிருக்கிறார்களே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய சீமான், “அனைத்து ஆதாரங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் எப்படி தர முடியும். 3,000 ஆண்டுகளாக இருக்கும் உங்கள் தமிழ்த்தாய் உங்களையெல்லாம் படிக்க வைத்தாரா ? அப்படீன்னு கேக்கறீங்க இல்ல. அப்படியென்றால் 3,000 ஆண்டுகளாக படிக்காமல்தான் கம்பன், கபிலன், இளங்கோ வந்தானா ?

இத்தனை இலக்கிய காப்பியங்கள் வந்ததா ? ஆகச்சிறந்த நன்னெறிகளை வகுத்துக் கொடுத்த வள்ளுவனை உலகம் முழுக்க கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 63 நாயன்மார்களும் குப்பையா ? பக்தி இலக்கியத்தை நீங்கள் குப்பை என்கிறீர்கள். கம்பனை, இளங்கோவை முட்டாள் என்கிறீர்கள். நாங்கள் படிக்கவே இல்லை என்கிறீர்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்கிறான் பாரதி. இதில் எது சரி ? இவர்களைப் போல் பொய், புரட்டுடன் திரியவில்லை பாரதி. திருவள்ளுவரை முட்டாள் என்று சொன்னால் நீங்கள் யார் ? அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவதைப் போன்ற ஒரு முரண் இருக்கிறதா ? இரண்டு சிலைகளை ஒன்றாக வைத்தால் இரண்டும் ஒன்றாகி விடுமா ? இருவரின் சிந்தனையும் ஒன்றா ? ஆனால் அம்பேத்கர் உலகத்திலேயே ஆகச்சிறந்த கல்வியாளர். ஆனால் இவர் யார் ? அம்பேத்கர் ஆகச்சிறந்த தத்துவார்த்தவாதி.

சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீஸார்

இவர் யார் ? தனக்கு தோன்றியதை எல்லாம் பேசிவிட்டுப் போறது. அம்பேத்கர் உலகப் பொதுமைக்கான சித்தாந்தவாதி. ஆனால் இவர் சிந்தித்தது, பேசியது, எழுதியது அனைத்தும் தமிழினத்துக்கு எதிரானது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னீர்களே நீங்கள் எந்த மொழியில் பேசினீர்கள், எழுதினீர்கள் ? அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரத்தை கேட்கிறீர்கள் ? அனைத்தையும் வெளியிடுங்கள் நான் எடுத்துக் கொடுக்கிறேன் ஆதாரம். நாங்கள் வெளியிட்டிருக்கும் ஆதாரம் போதவில்லை என்றால், பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு என்னிடம் ஆதாரம் கேளுங்கள் நான் தருகிறேன். திராவிடம் என்று பேசி முன்னாள் இருந்த எங்கள் தாத்தன், பாட்டனை எல்லாம் நசுக்கித் தள்ளிவிட்டீர்கள். இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம்.

கருத்தியலாகவோ, அரசியலாகவோ ஒருவரும் எதிர்த்து நிற்க முடியாது. இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர் என்று சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.க-வும். அதையேதான் இவரும் எழுதி வைத்திருக்கிறார். இஸ்லாமியரும், கிறிஸ்துவர்களும் இந்த மண்ணின் மக்கள். தமிழை தாய் மொழியாகக் கூடிய பூர்வகுடி மக்கள். சாதிய இழிவு கொடுமையை சகிக்க முடியாமல் இந்த மாற்று மதத்தை ஏற்றுக்கொண்டு சென்றவர்கள். அப்புறம் அவர்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீடு தவறு என்று சொன்னால் ? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு என்னிடம் சான்று கேளுங்கள் தருகிறேன். எங்கள் மூதாதையார் வள்ளலார், வைகுண்டரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்ததை பெரியார் செய்தார்” என்றார். அப்போது, `பெரியார் என் தாத்தா என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் மாறி மாறி பேசுகிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆமாம் நான் சொன்னேன்.

செய்தியாளர் சந்திப்பில் சீமான்

அது தப்பு. அது தாத்தா இல்ல பேத்தாவ இருக்குது. இப்போ  என்ன பண்ணலாம் ? நான் மாறி மாறி பேசவில்லை. நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால் தெளிவு வருகிறது. என் இனச் சாவில்தான் இவர்களெல்லாம் திருட்டுப் பையன் என்று தெரிய வருகிறது. 2008, 2009, 2009, 2010-ல் தான் திராவிடன் திருடன் என்று தெரிந்தது” என்றார். அப்போது, `காலத்திற்கு ஏற்றவாறு சீமானின் கொள்கை மாறிக் கொண்டே இருக்குமா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆமாம். காலத்திற்கேற்றவாறு மாறுகிறது. என் தலைவனை 2008-ல் நான் சந்திக்கும் வரை நானும் இந்த திராவிட திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருந்தேன். அவரை சந்தித்தப் பிறகுதான் தமிழன் என்றால் யார்… தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரிந்த பிறகுதான் இந்த அரசியலை கட்டமைக்கிறேன். மண்ணின் விடுதலைக்காக சொத்தை விற்றவர் என் பாட்டன் வ.உ.சி. ஆனால் தன்னுடைய சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் பெரியார். திராவிடத்தை, பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை” என்றார்.