ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் ரஷ்ய மாணவிகளுக்கு ஊக்கத்தொகை – அறிவிப்பு வெளியிட்ட ரஷ்ய அரசு

ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ரூ.81,000 ஊக்கத்தொகை வழங்கவுள்ளது ரஷ்ய அரசு. ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் வரிசையில் தற்போது ரஷ்யாவும் இதில் இணைந்துள்ளது.

ரஷ்யாவில் கரேலியா மாகாணத்தில் வசிக்கும் மாணவிகள் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், ரஷ்யாவில் கரேலியா மாகாணத்தில் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முழு நேர படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர்களுக்கு 100000 ரஷியன் ரூபிள் ( இந்திய ரூபாய் மதிப்பில் 81 ஆயிரம்) ஊக்கத்தொகை வழங்கவுள்ளது. இதனை தி மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

representation image

இந்த புதிய சட்ட விதிமுறை படி, இறந்த குழந்தையை பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு இந்த தொகை கிடைக்காது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது ரஷ்ய அரசு. உடல் நலக்குறைவால் குழந்தை இறக்கும் பட்சத்தில் தொகை திரும்ப பெறப்படுமா என்பன உள்ளிட்ட தகவல்கள் தெளிவுபடுத்தவில்லை. மேலும் ஊனமுற்ற குழந்தையை பெற்றெடுக்கும் நபர்களுக்கு இந்த விதிமுறை பொருந்துமா என்பனவற்றையும் இந்த சட்ட விதிமுறைகள் தெளிவுபடுத்தவில்லை.

ரஷ்யாவின் பிறப்பு விகிதமானது வரலாறு காணாத வகையில் தற்பொழுது குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே ரஷ்யாவில் பிறந்துள்ளன. இது கடந்த 25 ஆண்டுகளில் பதிவான பிறப்பு விகிதத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கை ஆகும். 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையானது 16,000 குறைந்துள்ளது. ரஷ்ய தேசத்தின் எதிர்காலத்திற்கு இது பேரிழப்பு என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

representation image

கரேலியா மாகாணத்தைப் போலவே ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இதுபோன்ற சலுகை செயல்படுத்தப்படுகின்றன. மத்திய ரஷ்யாவில் உள்ள டாம்ஸ்க் என்ற நகரத்திலும் இதே போன்ற திட்டம் உள்ளது. ரஷ்யாவில் 11 பிராந்திய மாகாணங்கள் குழந்தை பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு நிதிச் சலுகைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதுபோலவே ரஷ்ய அரசு மகப்பேறு நிதியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மகப்பேறு தொகையாக 6,30,400 ரஷ்யன் ரூபில் கொடுக்கப்பட்டு வந்தது. 2025 ஆம் ஆண்டு முதல் மகப்பேறு தொகை 6,77,000 ரஷ்யன் ரூபில்களாக உயர்த்தி உள்ளது. குறைந்த பிறப்பு விகிதம், அதிக வயது வந்தோர் இறப்பு மற்றும் மற்ற நாடுகளுக்கு மக்கள் குடியேற்றம் காரணமாக ரஷ்யாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. உக்ரைன்- ரஷ்யா போரின் காரணமாக நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மற்ற வெளிநாடுகளுக்கு மக்கள் பெருமளவில் வெளியேறுகின்றனர். இதனால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்ய அரசு ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட செல்களில் ஈடுபட்டு வருகிறது.