கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கனடாவின் அரசியல் சூழல் பரபரப்பாகியிருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், “கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைவதை கனடாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றிணைவோம்.
அது பெரிய தேசமாக இருக்கும். நீங்கள் செயற்கையாக வரையப்பட்ட கோடுகளிலிருந்து விடுபட்டு, அந்த மாற்றம் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். மேலும் இது தேசிய பாதுகாப்பிற்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களிடம் மிகச் சிறிய இராணுவமே உள்ளது. அவர்கள் எங்கள் இராணுவத்தைதான் நம்பியிருக்கிறார்கள். அதற்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும்” என்றார்.
இதற்கு முன்னதாக, ‘வட அமெரிக்க நாடு பகிரப்பட்ட எல்லையில், பாதுகாப்பை அதிகரிக்க கணிசமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கனட அரசு குறைக்கும் வரை, கனேடிய பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்” என டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் விவாதமாகியிருக்கிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுமா அது எப்படி நரகத்தில் ஒருப் பனிப்பந்து… வாய்ப்பே இல்லை. இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்கள் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு பங்காளியாக இருப்பதன் மூலம் பயனடைகின்றனர். டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களால் நாடு ஒருபோதும் பின்வாங்காது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, “கனடாவைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததை ட்ரம்ப் தனது கருத்துக்களால் வெளிப்படுத்தியிருக்கிறார். எங்கள் பொருளாதாரம் வலுவாக உள்ளது, எங்கள் மக்கள் வலிமையானவர்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கனடாவும் அமெரிக்காவும் டிரில்லியன் டாலர் வர்த்தக உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. ஜனவரி 20 அன்று பதவியேற்ற பிறகும் டொனால்ட் ட்ரம்ப் தனது அச்சுறுத்தலைப் பின்பற்றினால், அது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.