“சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது”- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், “போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்படை உரிமையைப் பறிக்க எந்த அரசுக்கும் அதிகாரமில்லை. தி.மு.க ஆதரவால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருக்கிறது என்பது அதீத கருத்து. தி.மு.க வெளிச்சத்தில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக அந்த கட்சித் தலைமை கூறியிருப்பது சரியல்ல. அதை முரசொலியில் கூறியிருப்பதும் பொருத்தமானதல்ல.” எனச் செய்தியாளர்களிடம் பேசியது அரசியல் விவாதப்பொருளைக் கிளப்பியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்

இத்தகைய சூழலில், திமுக எம்.பி ஆ.ராசா, சென்னையில் தனியார் கல்லூரியொன்றில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், “உலகத்தில் தத்துவங்கள் தோன்றும். அந்தத் தத்துவங்களை முன்னெடுப்பதற்காகத் தலைவர்கள் தோன்றுவார்கள். அப்படித் தலைவர்கள் வரும்போது, அந்தத் தத்துவங்கள் இயற்கையாகவே சிதிலமடையும். ஏனெனில், வருகின்ற தலைவர்களுக்குச் சுயநலம் வந்துவிடும். இன்றைக்கு மார்க்ஸை விட பெரிய தலைவர் உண்டா… மூலதனத்தை (Das Kapital) எழுதும்போது அவருக்கு எவ்வளவு வறுமை தெரியுமா… ஆனால், அவர் எழுதிவைத்துவிட்டுப் போன கம்யூனிச தத்துவம்தான் மிகப்பெரிய பிரளயத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியது. ரஷ்யாவின் உருவாக்கத்தை வலுப்படுத்தியது.

அதற்குப் பின்னால் வந்த, பிரட்ரிக் ஏங்கெல்ஸாக இருந்தாலும், லெனினாக இருந்தாலும் தத்துவத்தைச் சரியாகப் பார்த்துக்கொண்ட தலைவர்கள் இருந்த வரை தத்துவத்துக்குச் சேதாரம் இல்லை. ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது. பிறகு குருசேவ் வந்தார். கடைசியாக கோர்பசேவ் வந்தார். எந்த பொதுவுடைமைத் தத்துவத்தில் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றாக்கி, அமெரிக்காவுக்கெதிராக ரஷ்யாவைக் கட்டமைத்தார்களோ, அந்த நாடு சிதைந்து போனதற்கு என்ன கரணம்… கோர்பசேவ் என்கிற தலைவர் மோசமானவர்.

ஆ.ராசா

தத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்தத் தத்துவத்தைக் கையாளுகின்ற, அடுத்த தலைமுறைக்கு வருகின்ற தலைவர்கள் கெட்டவர்களாக இருந்தால், அந்தத் தத்துவம் தோற்றுப்போகும். தத்துவத்தின்மீது தலைவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை குறைய குறைய தத்துவம் தோற்றுவிடும். தத்துவத்தில் தவறு இல்லை. கம்யூனிச தத்துவம் செம்மையானது. ஆனால், அந்தத் தத்துவத்தை எடுத்து வந்த தலைவர்கள் நீர்த்துப்போன காரணத்தினால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தினால் கொள்கை நீர்த்துப்போய்விட்டது, தோற்றுப்போய்விட்டது.” என்று கூறினார்.

பெ.சண்முகம்

ஆ.ராசாவின் இத்தகையப் பேச்சுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்வினையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், “ஆ.ராசா சொல்வது மிக மிகத் தவறானது. தலைவர்களின் கொள்கை எப்படி நீர்த்துப்போய்விட்டது? நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, தலைவர்களின் செயல்கள் நீர்த்துப்போய்விட்டது என்று கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அந்தப் பேச்சை அவர் திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் எந்த அடிப்படையில் அப்படிக் கூறுகிறார் என்று சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal