New Orleons Attack: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்…15 பேர் உயிரிழப்பு! – என்ன நடந்தது?

அமெரிக்காவின் லூசியானாவில் அமைந்திருக்கிறது நியூ ஆர்லியன்ஸ் நகரம். அங்கே உள்ள பிரெஞ்ச் குவாட்ரஸ் பகுதியில் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, புத்தாண்டு கொண்டாடுவதற்காக கூடியிருந்த கூட்டத்திற்குள் ஒருவர் பிக் அப் டிரக்கை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் அரசு தரவுகள் கூறுகின்றன.

5 பேர் உயிரிழப்பு!

இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டிரக்கில் ஐ.எஸ் கொடி பறக்கவிடப்பட்டிருந்திருக்கிறது. தற்போது நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சம்சுதீன் ஜாபர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலுக்கு காரணமான இந்த நபரை அங்கிருந்த போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

42 வயதான ஜாபர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். 2006-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த இவர், 2009-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு நாடு பெயர்ந்துள்ளார். அங்கே கிளர்க் ஆக பணியாற்றி வந்துள்ளார்.

மீண்டும் 2015-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.

இவருடைய குற்றப்பின்னணி என்று பார்த்தால், 2002-ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கிலும், 2005-ம் ஆண்டு செல்லாத ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ ஆர்லியான்ஸில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னால், ஜாபர் பல வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதை ஆய்வு செய்து வரும் அமெரிக்க போலீஸ் அமைப்பான எஃப்.பி.ஐ, அந்த வீடியோவில் ஜாபர் தாக்குதல் குறித்து பேசியிருப்பதாக கூறியுள்ளது. மேலும், சமீபத்தில் ஆன விவாகரத்தால் மனம் உடைந்து போயிருந்த ஜாபர், தாக்குதல் இடத்தில் நடந்த கொண்டாட்டத்தில் அவரது முன்னாள் குடும்ப உறுப்பினர்களையும் கலந்துகொள்ள வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், ஏதோ காரணங்களால், இந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.

ஜாபரின் வீடியோ பதிவுகளை எஃப்.பி.ஐ தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அந்த வீடியோக்கள் ஒன்றில், ஜாபர் தான் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக பேசியுள்ளார்.

பின்னணி என்ன?!

ஜாபர் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்களின் படி, அவர் கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் சிக்கி வந்துள்ளார். அவரது பிசினஸும் சரியாக போகவில்லை. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஜாபர் மட்டுமல்லாமல், வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது எஃப்.பி.ஐ.