‘இது என்னுடைய நாடு. ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்’ என்று நினைத்து, இளைஞர்கள் பணிசெய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியிருந்தது இந்தியா முழுவதிலும் பரபரப்பை கிளப்பியது.
இதை நாராயண மூர்த்தி புதிதாக ஒன்றும் கூறவில்லை. இதற்கு முன்பு கூட இதே கருத்தை ஒரு சில முறைகள் தெரிவித்திருக்கிறார். ‘இந்தியாவின் உற்பத்தி திறன் உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. இதை சரி செய்ய நாம் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும்’ என்பது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கருத்து.
இது ஒருபுறம் இருக்க, ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில், “பொருளாதாரம் வளர்ச்சி வேண்டும் என்பது தான், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதன் நோக்கம். கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தைவான், சீனா ஆகிய நாடுகளை பார்க்கும்போது, அவர்கள் கடும் உழைப்பின் மூலம் தான் முன்னேறி உள்ளனர். சில நேரங்களில், அந்த நாடுகள் அதன் மக்களுக்கு தண்டனை போல அதிகஅளவிலான வேலையைக் கூட கொடுக்கும்.
இன்னொரு பக்கம், இந்த நாடுகளில் மிகவும் குறைந்த பிறப்பு விகிதம் தான் உள்ளது. அதனால், அந்த நாடுகளின் அரசுகள் மக்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கூறி கோரிக்கை வைக்கின்றது.
இந்த இரண்டையும் வைத்து பார்க்கும்போது, பொதுவாக இரண்டு கேள்விகள் எழும். ஒன்று, பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையான உழைப்பு தேவை தானா? இன்னொன்று, பெரிய மக்கள் தொகை தங்களது வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாமல் தனிமையாக செலவிடும் அளவுக்கு இந்த வளர்ச்சி தேவை தானா? (தெளிவாக சொல்ல வேண்டுமானால், ‘உழைப்பு…உழைப்பு’ என குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இப்போது இருந்துவிட்டு, வயதான காலத்தில் யாரும் இல்லாமல் தனிமையில் நேரத்தை செலவிடும் அளவுக்கு வளர்ச்சி தேவை தானா?)
முதல் கேள்விக்கு, ‘இந்த பெரிய மக்கள் தொகையில் (இந்திய மக்கள் தொகையில்) ஒரு சிறிய சதவிகித மக்கள் மட்டும் தாங்களாகவே கடுமையாக உழைக்க முன்வந்தால் போதுமானது. ‘தங்களாகவே முன்வருவது’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படியான ஒருவன் தான் நான். ஆனால், ‘இவர்கள் வர வேண்டும்’ என யாரையும் பரிந்துரைக்கமாட்டேன். இவர்கள் 2 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் வரை இருந்தால் மட்டுமே போதும். அதுவே நமது நாட்டின் விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
மீதம் உள்ளவர்கள் தேவையான அளவிற்கான வேலை சமநிலையை (Decent work life balance) நோக்கிச் செல்லலாம். இது தான் தற்போது தேவைப்படும் சமநிலை என்று நான் நம்புகிறேன்’ என்பது என் பதில்.
மக்கள் தொகை பற்றிய இரண்டாவது கேள்விக்கு, ‘அப்படியான வளர்ச்சி ஒன்றும் தேவையில்லை’ என்பது என் பதில். சீனாவின் பொருளாதார வெற்றி என்பது அதன் மக்கள் தொகை வீழ்ச்சி மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது இந்தியாவில் வேண்டாம். ஏற்கெனவே இந்தியாவில் (தென்னிந்தியாவில்) மாற்று கருத்தரித்தல் சிகிச்சைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் மேலும், கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்ற மக்கள் தொகை வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வது நல்லதல்ல.
மக்கள் தொகை குறையும் அளவுக்கு கடுமையாக உழைத்து தான் நாம் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமென்பதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.