மைசூர் சாண்டல் சோப் என்ற பிரபல சோப் கர்நாடகா அரசின் பொதுத்துறை நிறுவன தயாரிப்பாகும். சந்தன மண் என்றழைக்கப்படும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இன்றளவும் சந்தன மரங்கள் செழித்தோங்குகின்றன. திரவ தங்கமாகக் கருதப்படும் தூய சந்தன எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மைசூர் சாண்டல் சோப் வரலாற்று பாரம்பர்யம் கொண்ட தயாரிப்பாக விளங்குகிறது.
கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த அரசு நிறுவனம் மைசூர் சாண்டல் சோப் மட்டுமின்றி பல்வேறு தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது.
2023- 2024 நிதியாண்டில் இந்த நிறுவனம் ரூ. 362.07 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இதில் 30 சதவிகித பங்கான ரூ.108 கோடியை ஈவுத்தொகையாக கர்நாடகா மாநில அரசுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது.
மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை இந்த நிறுவனம் வழங்கியிருக்கிறது. கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவன வரலாற்றில் இதுவே அதிகபட்ச லாபமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, “இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 15.91 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியது. தற்போது அது 108 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது .
இதுவே இந்த நிறுவனத்தின் அதிகபட்ச வருமானமாகும். கே.எஸ்.டி.எல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது . இந்த நிறுவனம் இந்திய சந்தை மட்டுமன்றி சர்வதேச சந்தையிலும் கால் பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.